Published : 05 Sep 2018 07:49 PM
Last Updated : 05 Sep 2018 07:49 PM
தமிழக்தில் கடந்த 3 நாட்களாகப் பாசிசம் என்ற வார்த்தை சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும் பரபரப்பான பேசுபொருளாக மாறி இருக்கிறது.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் விமானத்தில் சென்றார். அவர் சென்ற விமானத்தில் பயணத்தில் சக பயணியும் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும், கனடாவில் டாக்டர் படிப்பு படித்துவருபவருமான லூயிஸ் சோபியா என்ற இளம் பெண் தமிழிசையை நோக்கி பாஜக ஒழிக, பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டார்.
அதன்பின் தமிழிசைக்கும், சோபியாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து பாஜக தலைவர் தமிழிசை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் சோபியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மறுநாள் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தற்போது சோபியா விடுவிக்கப்பட்டுள்ளார்.
இப்போது மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வரும் பாசிசம் என்ற வார்த்தைக்குப் பெரும்பாலானோருக்கு ஆழமான அர்த்தம், தீவிரத் தன்மை, ஏன் அந்த வார்த்தை குறிப்பிட்ட அரசு மீது பயன்படுத்துகிறார்கள் என்பது பலருக்கும் புரியாததாக இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தீவிர அரசியல் சித்தாந்தங்களுக்குள் பாசிசமும் ஒன்றாகும். பாசிச சித்தாந்தத்தின் தந்தையாக இத்தாலியின் சர்வாதிகாரியாகிய பெனிடோ முசோலினி கருதப்படுகிறார். அதன்பின் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பதவிக்கு வரும் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் முசோலினியை பின்பற்றி நாஜிசம் என்ற பெயரில் பாசிசக் கோட்பாட்டை உருவாக்கினார். இதுதான் சுருக்கமான வரலாறாகும்.
இத்தாலியின் முசோலினி, ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர் ஆகியோரே பாசிசத்துக்கு வரலாற்றில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
பாசிசம் என்பது என்ன?
பாசிசம் என்பது சர்வாதிகாரியின் தலைமையில், சமூக நிறுவனங்கள், பண்பாட்டு நிறுவனங்கள், பொருளாதார கொள்கைகள் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக் கொண்டு ஆட்சி அதிகார வர்க்கத்தால்(போலீஸார், ராணுவம், ஆட்சிநிர்வாகம்) ஒற்றைக் கருத்தியலை சமூகத்தின் மீது திணித்து அடக்குமுறை செய்வதாகும்.
தேசத்தின் பெருமை, நலன், மகத்துவம், இனப்பெருமை, இனத்தின் மகத்துவம் ஆகியவையே பாசிச அரசின் பிரதானக் கொள்கை மற்றும் செயல்பாடாகும்.
தனிமனித உரிமைகளை மதிக்காமல், நாட்டு நலனுக்காக, வளர்ச்சிக்காக எனக்கூறி அரசுக்குச் செயல்பாடுகளை, நடவடிக்கைகளைக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் அதிகார எந்திரங்கள் மூலம் நசுக்குகிற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.
எங்கிருந்து சொல் உருவானது?
பாசிசம் என்ற சொல் பாஸ்சியோ (Fascio) அல்லது பாஸ்சி (Fasci) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவானது. இத்தாலிய சொல்லாகிய Fascio என்பதற்கான பொருள் இறுக்கமாகக் கட்டப்பட்ட குச்சிகளின் கட்டு என்பதாகும். கோடாரிச் சின்னமே பாசிச ராணுவத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டது. ஹிட்லர் தன் நாஜிக் கட்சியின் சின்னமாக ஸ்வஸ்திக்கைப் பயன்படுத்தினார்.
வரம்பற்ற அதிகாரம் கொண்ட அரசின் மகத்துவத்துக்காக தன்னுடைய அனைத்து உரிமைகளையும் எல்லோரும் அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
பாசிசத்தின் இயல்புகள்
பாசிசத்தில் தலைவனை மக்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுவார்கள். அந்த வகையிலான மக்கள் கூட்டத்தை கொண்ட அரசாங்க முறைதான் பாசிச அரங்கமாகும். பாசிசம் நிலவும் அரசில் அஹிம்சை, சமத்துவம், ஜனநாயகம், தனிமனித உரிமை ஆகியவை நசுக்கப்படும். தலைவனைக் கண்மூடித்தனமாக மக்கள் பின்பற்ற கட்டாயப்படுத்தப்படுவார்கள். அனைத்தும் நாட்டின் நலனுக்காக என்று மக்களின் மூளையில் ஏற்றப்படும். பாசிச அரசில் பள்ளி, குடிமக்களின் கல்வி, பணி, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தலையீடு இருக்கும்.
இன்றைய இளைய தலைமுறை மத்தியில் பாசிசம் என்ற வார்த்தை அதன் ஆழமான வரலாற்றுப் பின்னணி தெரியாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஒரு வார்த்தையின் வரலாறும் காலப்போக்கில் விரிவடைவதும், பரவலாவதும் இயல்புதான். அந்த வகையில் இன்றைய சூழலில் பாசிசம் என்ற வார்த்தை பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT