Published : 28 Sep 2014 02:38 PM
Last Updated : 28 Sep 2014 02:38 PM
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே வன்முறைகள் வெடித்தன. இன்று சற்றே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளது தமிழகம்.
பேருந்து போக்குவரத்துக்கள் படிப்படியாக தமிழகமெங்கும் தொடங்க, சென்னையில் கடைகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் உணவு விடுதிகள் திறக்கத் தொடங்கியுள்ளன.
மத்திய அரசு, தமிழக அரசுக்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்குமாறு அறிவுறுத்தியதையடுத்து வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று எந்த வித அசம்பாவிதமும் இதுவரை நடைபெறவில்லை.
ஆனாலும், தமிழகம்-பெங்களூர் இடையே பேருந்து போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை.
மதுரை உட்பட தெற்கு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கு பேருந்து போக்குவரத்து பெரும்பாலான இடங்களில் மீண்டும் தொடங்கியது. அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை நிகழவில்லை.
இருப்பினும் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை உள்ளிட்ட சில இடங்களில் பேருந்து போக்குவரத்து 50% தொடங்கியுள்ளது. ஆனால் கடைகள், விடுதிகள் பல இன்னமும் மூடப்பட்டுள்ளன.
தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துத் தொடங்கியது. சில இடங்களில் மட்டும் கடைகள் இன்னமும் திறக்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியாக இருந்த ஸ்ரீரங்கத்தில் இன்று கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடவில்லை.
ராமேஸ்வரத்தில் பிற ஊர்களுக்கான பேருந்து சேவை இன்னும் ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது. தேனியில் போலீஸ் அனுமதி பெற்ற பின்பு பேருந்து போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா நகரமான பாண்டிச்சேரியில் கடைகள், விடுதிகள் திறந்திருந்தாலும் ஊர் வெறிச்சோடியே காணப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT