Published : 26 Sep 2018 07:52 AM
Last Updated : 26 Sep 2018 07:52 AM

ராஜ்குமாரின் 108 நாட்கள் ‘வனவாச’ பின்னணி

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டோரை சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் கடத்திச் சென்று 108 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிகளில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அதன் முழு விவரம்: தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து, 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி, அமாவாசை நாளில் கன்னட நடிகர் ராஜ்குமார், அவரது மைத்துனர் எஸ்.ஏ.கோவிந்தராஜு, உறவினர் நாகேஷ், இயக்குநரும், ராஜ்குமாரின் உதவியாளருமான நாகப்பா ஆகியோரை துப்பாக்கி முனையில் வனத்துக்குள் கடத்திச் சென்றனர் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும்.

‘நான் அவருக்கு (ராஜ்குமார்) ஒரு தீங்கும் செய்ய மாட்டேன். என்னிடம் அவர் பத்திரமாக இருப்பார். இந்த கேசட்டை (ஒலிநாடா) கர்நாடக முதல்வரிடம் கொடுங்கள்’ என கடத்தலின்போது ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளிடம், வீரப்பன் ஒரு ஒலிநாடாவைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

அதில், ‘இதற்கு முன்பு நான் தனி மனிதனாக இருந்தேன். அப்போது உங்களுடைய அனுதாபமும், பரிவும் எனக்குத் தேவையாக இருந்தது. சரணடைய நான் விரும்பினேன். ஆனால், இப்போது நான் ஒரு இயக்கத்தின் அங்கமாக இருக்கிறேன். உங்களுடைய அனுதாபத்தை நான் தேடவில்லை. ராஜ்குமாரை விடுவிக்க காவல் துறையினரை அனுப்புவது பற்றி நீங்கள் சிந்திக்கக் கூடாது. நீங்கள் காவல் துறையை அனுப்பினால், ராஜ்குமாரின் உடல் கூறுகூறாகத் துண்டு போடப்பட்டு விடும். சில நிபந்தனைகளின் பேரில் ராஜ்குமாரை விடுவிப்பேன். அதற்காக ஒரு தூதரை என்னிடம் அனுப்புங்கள். விடுவிப்பது பற்றிய நிபந்தனைகளை நான் அவரிடம் விவாதிப்பேன்’ என்று அதில் பேசியிருந்தார் வீரப்பன்.

அடுத்த இரு நாட்களில் இரு மாநில அரசுகளின் தூதுவராக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், வீரப்பனைச் சந்திக்க வனப்பகுதிக்குள் சென்றார். இதனிடையே, தான் நலமாக இருப்பதாகவும், இரு மாநில மக்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் ராஜ்குமார் பேசிய ஒலிநாடா, வனத்தில் இருந்து வந்து சேர்ந்தது.

நக்கீரன் கோபால் குழுவினர் மூலமாக ஆகஸ்ட் 5-ம் தேதியன்று வீரப்பனின் நிபந்தனைகள் அடங்கிய அடுத்த ஒலிநாடா வந்து சேர்ந்தது. அதில் வீரப்பனின் 10 நிபந்தனைகள் இடம்பெற்றன.

காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீரைத் திறந்துவிட கர்நாடகா ஒப்புக்கொள்ள வேண்டும். காவிரி கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும். திருவள்ளுவர் சிலையை பெங்களூருவில் உடனே திறக்க வேண்டும். அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு கோரிக்கைக்கும் தமிழக - கர்நாடக அரசுகளின் சார்பில் பதில் தயாரிக்கப்பட்டு அவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டன. நக்கீரன் கோபால் மூலமாக இந்த பதில் வீரப்பனை சென்றடைந்தது.

வனத்தில் வீரப்பனைச் சந்தித்துவிட்டு திரும்பிய கோபால் மூலம் வீரப்பன் சார்பில் பதில் அறிக்கை வந்தது. அதில், அரசின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கோரிக்கை வாரியாக பதிவு செய்த வீரப்பன், கூடுதலாக 10-ம் வகுப்பு வரை தமிழே பாடமொழியாக இருக்க வேண்டும், சின்னாம்பதி, வாச்சாத்தியில் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என 2 புதிய கோரிக்கைகள் சேர்க்கப்பட்டு இருந்தன.

நக்கீரன் கோபால் குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு சென்ற நிலையில், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் வீரப்பன் - ராஜ்குமாரிடம் இருந்து ஒலி-ஒளி நாடாக்கள் வந்தன. அகில இந்திய வானொலி மூலம் பர்வதம்மாள், எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் வீரப்பனுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த சம்பவங்களும் நடந்தன.

இதற்கிடையே ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட அவரது உதவியாளர் நாகப்பா, வீரப்பனின் பிடியில் இருந்து செப்டம்பர் 28-ம் தேதி தப்பித்து வந்தார். வீரப்பனைத் தாக்கிவிட்டு, தான் தப்பித்து வந்ததாக நாகப்பா தெரிவித்தார்.

மீட்பு பணியில் நெடுமாறன்

பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, கே.சுகுமாரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மீட்புப் பணிக்காக வனத்துக்குள் சென்றனர். ராஜ்குமாருடன் கடத்தப் பட்ட அவரது மைத்துனர் கோவிந்தராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை நெடுமாறன் - நக்கீரன் கோபால் குழுவினருடன் வனத்தில் இருந்து வீரப்பன் அனுப்பி வைத்தார்.

கைதிகளை விடுவிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட பின்னடைவுகளால் மீட்பு பணி தாமதமானது. நெடுமாறன் குழுவினருடன் பானு என்ற மருத்துவரும் வனப்பகுதிக்கு சென்று ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்துவிட்டு திரும்பினார்.

108 நாள் வனவாசத்துக்குப் பிறகு, நவம்பர் 14-ம் தேதி நெடுமாறன் குழுவினர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றனர். அன்று இரவு வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை விடுவித்த நெடுமாறன் குழுவினர், ஈரோடு ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள ராமராஜ் என்ற அரசியல் கட்சி பிரமுகர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். நவம்பர் 15-ம் தேதி ராஜ்குமார் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x