Published : 16 Jan 2014 02:48 PM
Last Updated : 16 Jan 2014 02:48 PM

40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற சூளுரை ஏற்க வேண்டும்: கட்சித் தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதி களிலும் வெற்றிபெற சூளுரை ஏற்கவேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

எம்.ஜி.ஆர். 97-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அக்கட்சித் தொண்டர்களுக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும், சாமான்ய மக்களுக்காகவும் பாடுபடுகின்ற உயர்ந்த மனிதர்களை ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் பார்க்க முடியும். எம்.ஜி.ஆர். அத்தகைய ஒரு வரலாற்று மனிதர் மட்டுமல்ல, அவரை ஒத்த சரித்திர நாயகர்களுக்கெல்லாம் இல்லாத மேலும் பல சிறப்புகளைப் பெற்றவர்.

அண்ணா மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். ஒரு "கிங் மேக்கராக" செயல்பட்டு கருணாநிதியை முதல்வர் ஆக்கினார். அந்தப் பதவி கிடைத்ததும் கருணாநிதி குடும்ப ஆதிக்கம் தி.மு.கவில் கொடி கட்டிப் பறந்தது. இதைத் தட்டிக் கேட்ட எம்.ஜி.ஆரை கட்சியைவிட்டே நீக்கினார் கருணாநிதி.

நாட்டு நலன் கருதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். மக்கள் முன்னேற்றத்துக்காக அரசியலில் களம் இறங்கிய எம்.ஜி.ஆர்., ஆட்சி முறையிலும், நிர்வாகத்திலும் செய்த மாற்றங்கள் எல்லாம் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மவுனப் புரட்சிகள்.

எம்.ஜி.ஆர். கண்ட கனவுகளை நனவாக்குவோம்

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த எம்.ஜி.ஆரின் வழியில் நாம் இப்போது ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறோம். எம்.ஜி.ஆர். கண்ட கனவுகளை நனவாக்கவும், அவர் இட்டுச் சென்ற கட்டளைகளை நிறைவேற்றவும் நான் நாள்தோறும் பாடுபட்டு வருகிறேன். தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும், தமிழ்நாட்டுக்கு உரிய நிதியும் நீதியும் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்த லட்சியம் நிறைவேற வேண்டுமென்றால் மாநிலங்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஒரு மத்திய அரசு அமைய வேண்டும். தற்போதுள்ள மத்திய அரசோ, இருக்கின்ற அதிகாரங்களைப் பறிக்கக்கூடிய அரசாக உள்ளது. இந்த அரசுக்குத்தான் சில மாதங்களுக்கு முன்புவரை கருணாநிதி ஆதரவு அளித்து வந்தார்.

1996-ம் ஆண்டு முதல், நடுவில் ஓராண்டைத் தவிர 2013-ம் ஆண்டு வரை மத்திய ஆட்சியில் திமுக பங்குவகித்தது. அதாவது, கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது.

இதன்மூலம், கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சி பெருத்த வளர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு புதிய, புதிய தொலைக்காட்சிகள் உருவானதும், உலகப் பணக்காரர் பட்டியலில் தன் குடும்பம் இடம்பெறும் வகையில் குடும்ப வியாபாரம் பெருகியதும்தான் மிச்சம். ஆனால், தமிழ்நாட்டுக்கு, தமிழக மக்களுக்கு எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டுக்கும் தமிழக மக் களுக்கும் நன்மை பயக்கக்கூடிய ஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்பட வேண்டும். எல்லா வகைகளிலும் வஞ்சிக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

இவையெல்லாம் நடைபெற வேண்டும் என்றால் நாம் சொல்வதைக் கேட்கக்கூடிய மத்திய அரசு அமைய வேண்டும்.

பாரதத்தை வலிமைப்படுத்த

தமிழகத்தை வளப்படுத்த, பாரதத்தை வலிமைப்படுத்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக் கனியைப் பெறும் வகையில் கட்சியினர் உங்கள் அனைவருடைய களப்பணியும் அமைய வேண்டும். இந்த வெற்றியின் மூலம் இந்திய தேசத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும் மாபெரும் சக்தியாக அ.தி.மு.க விளங்கும். அதுவே, எம்.ஜி.ஆரின் புகழுக்கு நாம் செய்யும் மரியாதை. ஆகவே, கட்சித் தொண்டர்கள் அனைவரும் இதையே சூளுரையாக ஏற்று, இந்த நல்ல நாளிலேயே நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்குங்கள்.

இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x