Last Updated : 04 Sep, 2018 09:24 AM

 

Published : 04 Sep 2018 09:24 AM
Last Updated : 04 Sep 2018 09:24 AM

தந்தையும் தாயும் இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர்: சென்னையில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் தாயும் கொலை செய்யப்பட்டதால் ஆதர வற்ற சிறுவனை காவல் உதவி ஆணை யர் ஒருவர் மகனாக அரவணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயனாவரம் அடுத்த நம்மாழ்வார் பேட்டை, சுப்புராயன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி பரிமளா (33). இவர்களது ஒரே மகன் கார்த்திக் (15). இவர் மயிலாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வரு கிறார். கோவிந்தராஜன் ஏற்கெனவே, காலமாகி விட்டார். தாயின் அரவணைப்பில் கார்த்திக் இருந்தார். வேறு உறவினர்கள் இல்லை.

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி இரவு 11 மணிக்கு முன் விரோதம் காரணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் சூர்யா (18), பரிமளாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதனால் தாயை இழந்து கார்த்திக் ஆதரவற்று போனார். இதைத் தொடர்ந்து அயனாவரம் காவல் சரக உதவி ஆணையரான எம்.பாலமுருகன் தற்போது சிறுவன் கார்த்திக்கை அரவணைத்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து காவல் உதவி ஆணையர் பாலமுருகன் கூறியதாவது: கடந்த 31-ம் தேதி பரிமளா கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடந்தது எனது காவல் சரகத்துக்கு உட்பட்டது. எனவே, நான் நேரடியாக சென்றேன். கொலை தொடர்பாக அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்து விட்டீர்களா என தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்டேன்.

அவர், "கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒரு மகன் மட்டுமே உள்ளார். அவரை காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளோம்" என்று கூறி சிறுவன் கார்த்திக்கை காட்டினர். அவரது தாய் கொலை செய்யப்பட்ட தகவலை தெரிவித்து விட்டீர்களா என மீண்டும் ஆய்வாளரிடம் கேட்டேன். இல்லை என்று பதில் வந்தது. எப்படியும் மகனிடம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

உடனடியாக சிறுவன் கார்த்திக்கிடம் அவனது தாய் கொல்லப்பட்ட செய்தியை தெரிவித்தேன். இதைக் கேட்ட சிறுவன் நிலை குலைந்தான். அவனுக்கு கதறி அழவோ, சத்தம் போட்டு கூச்சலிடும் வயதோ இல்லை. ஆனால், தான் ஆதரவற்ற நிலையில் இருந்த நிலையை விவரிக்க முடியாத நிலையில் ஒரு வகையான சோகத்தோடு அப்படியே அமர்ந்தான். பின்னர், அவனை சமாதானம் செய்தேன். நீ கவலைப்படாதே. உன் அம்மா இருந்து செய்வதைவிட அதிகமாக செய்வோம் என்று கூறிவிட்டு வீடு திரும்பினேன்.

அன்று இரவு தூக்கமே வரவில்லை. மனம் தத்தளித்தது. யாருமே இல்லை என்றால் சிறுவன் என்ன செய்வான். எதிர்காலத்தில் பழிக்குப் பழியாக கொலைகாரனாகி விடக் கூடாது. அவனை எப்படியாவது ஆதரிக்க வேண்டும் என்று எண்ணினேன். அன்று இரவோடு இரவாக என் மனைவி கலா ராணியுடன் இதுகுறித்து விவாதித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். ஏற்கெனவே, 2 குழந்தை உள்ள நிலையில் மேலும் ஒரு குழந்தை நமக்கு சுமை அல்ல என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்த நாள் காலையிலேயே சிறுவன் தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று அங்குள்ள நிர்வாகிகளிடம், கார்த்திக்கின் முழு பாதுகாவலன் இனி நான்தான் என்றும் அந்த சிறுவனுக்கு என்ன செய்ய வேண்டுமானாலும் நானே செய்வேன் எனவும் எழுதி கொடுத்துவிட்டு, எனது செல்போன் எண்களையும் கொடுத்தேன்.

மேலும், அன்றே கார்த்திக்கை எனது வீட்டுக்கு அழைத்து உணவளித்தேன். எனது மகனுக்குள்ள உடைகளை அவனுக்கு அளித்தேன். தற்போது கார்த்திக்கும் எனது இன்னொரு மகன்தான். அவன் எனக்கு சுமை அல்ல சுகம்தான்.

தத்தெடுக்க நடவடிக்கை

சிறுவனுக்கு உறவினர்கள் யாரும் உள்ளனரா என்பதை ஆய்வு செய்தபின், எதிர்காலத்தில் சட்டப்படி அவனை மகனாக தத்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன். இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

காவல் உதவி ஆணையர் பாலமுருகனை யும் அவரது குடும்பத்தினரையும் பலர் பாராட் டினர். அவரது பெருந்தன்மை சக காவலர் கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x