Published : 17 Sep 2014 02:31 PM
Last Updated : 17 Sep 2014 02:31 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிட் விற்பனை வரைமுறை இன்றி நடைபெறுகிறது.ஆண்டுக்கு 50 பேருக்கு மேல் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆசிட் வீச்சு என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியது. மதுரையில் கடைகளில் சோதனை நடத்தி அனுமதியின்றி விற்கப்படும் ஆசிட் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மதுரையைவிட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிட் விற்பனை அதிகமாக உள்ளது. இவற்றில் 70 சதவீதத்துக்கும் மேல் எவ்வித உரிமமும் இன்றி விற்கப்படுகிறது என்பது அதிர்ச்சி கலந்த உண்மை.
ரப்பர் தொழிலில் ஆசிட்
மார்த்தாண்டத்தில் இருந்து திருவட் டாறு, குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை, அருமனை, கீரிப் பாறை, பாலமோர், கரும்பாறை வரை 15 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் ரப்பர் விவசாயம் நடை பெறுகிறது. ரப்பர் மரத்தில் வெட்டி எடுக்கப்படும் பாலை உறையச் செய்து தனியாக பிரித்தெடுக்க ஆசிட் பயன்படுத்தப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் காவல்கிணறில் பெண் ஒருவர் மீதும், இரு ஆண்டுகளுக்கு முன் கல்லூரி பேராசிரியை மீதும் ஆசிட் வீசப்பட்டது. ஆனால், உணர்ச்சி வேகத்தில் வீட்டில் ரப்பர் தொழிலுக்காக வைத்திருக்கும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சராசரியாக ஆண்டுக்கு 50 பேருக்கு மேல் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றிருப்பது மருத்துவப் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. இவற்றில் சிலர் உயிரிழந்துள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் அன்றாட வாழ்வை இயல்பாக கழிக்க முடியாத அளவில் உடல் ஆரோக்கியத்தில் குன்றிப்போயுள்ளனர்.
கடுமை தேவை
கல் உடைக்க பயன்படுத்தும் வெடி மருந்தை விற்பனை செய்ய எந்த அளவு கட்டுப்பாடு உள்ளதோ, அதே விதிமுறை ஆசிட் விற்பனையிலும் கையாளப்படுகிறது. ஆனால் பல கடைகளில் ஆசிட் விற்பனை இஷ்டம்போல் நடைபெறுகிறது.
ரப்பர் பாலை பிரித்தெடுக்க பயன்பட்டு பலரின் வாழ்வை உயரத்துக்கு கொண்டு செல்ல உதவும் அதே ஆசிட், பலரின் உயிரை பறிக் கும் ஆபத்தான அமிலமாகவும் உள்ளது. ஆசிட் விற்பனையில் கடுமையான விதிமுறைகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அருந்தினால் மீள்வது கடினம்
நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடலியல் நிபுணர் பிரபாகரன் கூறும்போது, ‘குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிலுக்காக ஆசிட் பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் பட்ட இடங்களை வேகவைப்பதுடன், குடித்தால் குடல் உள்ளிட்ட உள் உறுப்புகளில் ஓட்டைவிழச் செய்யும் தன்மை கொண்டது. உணவுக் குழாய், இரைப்பை போன்றவை வெந்து அழுகிவிடும். சிகிச்சை மேற்கொண்டாலும், வாழ்க்கையின் இறுதி வரை பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றார் அவர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT