Last Updated : 08 Sep, 2018 09:56 PM

 

Published : 08 Sep 2018 09:56 PM
Last Updated : 08 Sep 2018 09:56 PM

தமிழகத்தின் வட, உள் மாவட்டங்களில் நாளை முதல் 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்தநிலையில், இப்போது இந்தச் செய்தி குளிரச் செய்துள்ளது, சென்னையிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு.

தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவருகிறார். அவர் இன்று அடுத்த 15 நாட்களுக்கான மழை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காற்று வீசும் திசையில் இருந்து ஏற்படக்கூடிய மாற்றம், வெப்பம் ஆகிய காரணமாக நாளை(9-ம் தேதி) முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்தின் வட மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் இப்போது வரை நமக்கு மழை கிடைக்கவில்லை. செப்டம்பர் மாதத்தில்தான் காற்று பின்னோக்கி வீசுக்கூடும் என்பதால், அந்தக் காலகட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இதற்கு முன் 2013, செப்டம்பர் 12, 2011, செப்டம்பர் 6-ம் தேதி, 2007,செப் 27-ம் தேதி ஆகிய தேதிகளில் கனமழை பெய்திருக்கிறது.

 

அஸ்லாம், சிக்கிம், மேற்கு வங்கத்தின் தூராஸ், பீகார், சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் பருவமழை இன்னும் பெய்துவருகிறது.

இந்த நேரத்தில் தமிழகத்தில் பருவமழை பெய்யாத பகுதிகளில் மழை பெய்யக்கூடும். அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த மழை முதலில் உள்மாவட்டங்களில் நண்பகல் அல்லது மாலையில் தொடங்கி இரவில் தீவிரமாகும். கடற்பகுதியில் வீசும் காற்றுக்கு ஏற்ப மழை தீவிரமாகும். உள்மாவட்டங்களிலும் அதிகமான அளவில் மழை இருக்கும்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும். காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு.

சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலும் இரவு மற்றும் பின்இரவு நேரங்களில் மழை தீவிரமாக இருக்கும். பற்றக்குறையாக இருக்கும் மாவட்டங்களில் இந்த மாத இறுதிக்குள் ஓரளவுக்கு மழையை எதிர்பார்க்கலாம் பெங்களூரிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நீலகிரியில் குன்னூர், கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்ட பகுதிகள், மேட்டுப்பாளையும் பகுதிகள், கோவை போன்ற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் மழை இருக்கும். குறிப்பாக 10,11,12-ம்தேதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வெள்ளம் வரும் அளவுக்கு மழை பெய்யாது. இந்த மழையால் வெள்ளம் வந்துவிடும் என்று அச்சப்படத் தேவையில்லை. அவ்வாறு வரும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்

இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x