Last Updated : 01 Sep, 2018 11:21 AM

 

Published : 01 Sep 2018 11:21 AM
Last Updated : 01 Sep 2018 11:21 AM

சேலத்தில் இரண்டு பேருந்துகள் மோதி 7 பேர் பலி; 17 பேர் படுகாயம்

சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, சொகுசுப் பேருந்தின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலத்தில் இருந்து இன்று(சனிக்கிழமை) அதிகாலை தனியார் பேருந்து ஒன்று கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பூக்கள் ஏற்றிக்கொண்டு பெங்களூரு செல்லவிருந்த சரக்கு ஆட்டோ ஒன்று பஞ்சரானதால் மாமாங்கம் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சேலத்தில் இருந்து சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோ மீது பலமாக மோதி, நிலை தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பைத் தாண்டி பெங்களூரு-சேலம் சாலைக்கு சென்றது.

அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கேரளாவுக்கு சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சொகுசுப் பேருந்து சாலையோரம் கவிழந்தது. சொகுசுப் பேருந்தின் அடியில் சிக்கிய 4 பயணிகள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் இரண்டு பெண்கள் அடங்குவர்.

திடீர் தீ விபத்து

விபத்து குறித்துத் தகவல் அறிந்த பொதுமக்கள் பேருந்துகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் கவிழ்ந்த சொகுசுப் பேருந்து திடீரென்று தீப்பிடித்துது. உடனடியாக பேருந்தில் இருந்த தீயணைப்புக் கருவியைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

மாநகர காவல் ஆணையாளர் சங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

3 வயது குழந்தை உயிருடன் மீட்பு

விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை குழந்தைகள் நல அலுவலரிடம் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சேலம் ஆட்சியர் ரோகிணி நேரில் ஆறுதல் கூறினார்.

17 பேர் படுகாயம்

விபத்தில் படுகாயம் அடைந்த 17 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்னி பேருந்து ஓட்டுநர் சுரேஷ்குமார், பெங்களூருவைச் சேர்ந்த ஷீலா உட்பட 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x