Published : 07 Sep 2018 02:24 PM
Last Updated : 07 Sep 2018 02:24 PM
‘தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு தத்தெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்’ என ஆவணப்பட இயக்குநரும், திரவ நிலை பாலினத்தவருமான மாலினி ஜீவரத்னம் தெரிவித்துள்ளார். (திரவ நிலை பாலினம் என்றால் சில சமயங்களில் தன்னை ஆணாகவும், சில சமயங்களில் பெண்ணாகவும் உணர்வது)
‘லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்’ ஆவணப் படத்தின் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்திருப்பவர் மாலினி ஜீவரத்னம். திரவ நிலை பாலினத்தவராகத் தன்னை அறிவித்திருக்கும் மாலினி, இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவான 377-ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்திசை’யிடம் பேசிய மாலினி, “நாடு முழுவதும் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் குழந்தைகளைப் பாருங்கள். உங்களால் போற்றப்படும் எதிர் பாலின ஈர்ப்பில் உருவான குழந்தைகள்தான் அவர்கள். அவர்களைக் காப்பாற்றத் தவறியது யார்?
எதிர் பாலின ஈர்ப்பை நாங்கள் யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. எங்களின் பால் ஈர்ப்பை முடிவு செய்யும் சுதந்திரம் எங்களுக்கு உண்டு. அதைத்தான் இந்தத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. இந்த அடிப்படை அங்கீகாரம், அடுத்து எங்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தொடக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
எங்களுக்குத் திருமணம் சார்ந்த உரிமையும், குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். ‘இவர்களால் என்ன செய்ய முடியும்? ஒரு குழந்தை பெத்துக்க முடியுமா?’ என்று எங்களைக் கேலி செய்யும் சமூகம்தான் அனாதை விடுதிகளில், ஆசிரமங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகளை அனாதரவாக வைத்திருக்கிறது. அதுபோன்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கு எங்களுக்கு உரிமை வேண்டும்.
கல்வி, பணியிடங்களில் எங்களுக்கான இடங்களில் சலுகைகள் தர வேண்டும். குடும்பங்களில் பாலின அடையாளத்தை முன்னிறுத்தி செய்யப்படும் கேலி, கிண்டல் செய்பவர்களுக்கும், கவுரவக் கொலைகள் செய்பவர்களுக்கும் தகுந்த தண்டனைகள் அளிக்கும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். உணர்வு, உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான சட்டம் வேண்டும். முக்கியமாக, பால் ஈப்பைக் குடும்பங்கள் புறக்கணிக்கக் கூடாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT