Published : 11 Sep 2018 11:02 AM
Last Updated : 11 Sep 2018 11:02 AM
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கும், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், நிதி செயலர் கந்தவேலு, வளர்ச்சி ஆணையர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
பின்னர் இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
“தற்போது நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 27 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழைப் போற்றும் வகையில் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலை - ராஜீவ்காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளோம். அதேபோல காரைக்கால்-திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும், அங்குள்ள பட்ட மேற்படிப்பு மையத்திற்கும் டாக்டர் கலைஞர் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளோம். மேலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேசி வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT