Published : 10 Sep 2018 02:36 PM
Last Updated : 10 Sep 2018 02:36 PM
மதுரை சிறைத்துறை எஸ்பி, தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு வாட்ஸ் அப் மூலமாக கொலை மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ‘புல்லட்’ நாகராஜ். இவர் பல்வேறு கொள்ளை, கொலை தொடர்பான வழக்குகளில் கைதாகி பலமுறை சிறை சென்றவர். இவரது சகோதரர் ‘புல்லட்’ பாண்டி என்பவரும், தன் மனைவியை கொலை செய்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து தற்போதுதான் விடுதலையாகியுள்ளார்.
இந்நிலையில்,’ புல்லட்’ நாகராஜ் சமீபத்தில் வாட்ஸ் அப் ஆடியோ மூலமாக மதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, இன்ஸ்பெக்டர் மதனகலா, தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக எஸ்.பி.ஊர்மிளா, இன்ஸ்பெக்டர் மதனகலா ஆகியோர் புகார் அளித்திருந்தனர். அந்த ஆடியோவில், குறிப்பாக, தன்னை யாராலும் பிடிக்க முடியாது எனக்கூறி போலீஸாருக்கே சவால் விடும் தொனியில் பேசினார் ‘புல்லட்’ நாகராஜ். மேலும், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தனது வீட்டில் சோதனையிடக் கூடாது எனவும், உறவினர்களையும், நண்பர்களையும் விசாரித்து துன்புறுத்தக் கூடாது எனவும் ஆடியோவில் கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து நாகராஜனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை பெரியகுளத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தற்செயலாக ‘புல்லட்’ நாகராஜ் தனது பல்சர் வண்டியில் சென்றுள்ளார். அவரை, பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் விரட்டிச்சென்று பிடித்தார்.
இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிடிபட்ட ‘புல்லட்’ நாகராஜை பைக்கிலிருந்து கீழே இறக்குகிறார் காவலர் காசிராஜன். ‘புல்லட்’ நாகராஜின் சட்டையைப் பிடித்தபடி அவரை இழுத்து ஜீப்பை நோக்கிச் செல்ல முயல்கிறார் காசிராஜன். அப்போது நாகராஜ் திமிறி விடுபட முயல்கிறார். உடனே காவலர் காசிராஜன், ஓங்கி நாகராஜின் பின்னந்தலையில் அடிக்கிறார். பின்னர் ஜீப்பை நோக்கி இழுத்துச் சென்று உள்ளே தள்ளுகிறார்.
பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கைதான புல்லட் நாகராஜிடம் தென்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT