Published : 24 Sep 2018 05:57 PM
Last Updated : 24 Sep 2018 05:57 PM
சேலம் அருகே வேளாண்மைத்துறை அதிகாரி அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு இடம் மாறுதல் செய்ததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே அரியானூரில் உள்ள பாரப்பட்டியைச் சார்ந்த சிவகுமார் (52), வேளாண்மை துறையில் டிப்ளமோ படித்துள்ளார். இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகத்தில் துணை வேளாண்மை அலுவலராகப் பணியாற்றி வந்தார். இவர் இன்று (திங்கள்கிழமை) காலை பாரப்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயற்சி செய்தார் . உயிருக்குப் போராடிய அதிகாரி சிவக்குமாரை உறவினர்கள் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவகுமார் இறந்து விட்டார்.
இதையறிந்த மல்லூர் போலீஸார் சிவகுமாரின் சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். சிவகுமார் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த திரளான உறவினர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து அவரது சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர்.
அதிகாரி சிவகுமார் இதற்கு முன்பு ஆட்டையாம்பட்டியில் உள்ள உழவர் சந்தையில் துணை நிர்வாக அதிகாரியாகப்- பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அவர் திடீரென விழுப்புரம் மாவட்டத்திற்கு இடம் மாறுதல் செய்யப்பட்டார். இதனால் அதிகாரி சிவக்குமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் விழுப்புரத்திலிருந்து வெண்ணந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளார் .
அடிக்கடி இடம் மாறுதல் செய்த காரணத்தால் சிவகுமார் சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் இன்று அதிகாலை வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அதிகாரி சிவகுமார் தற்கொலைக்கு வேறு காரணம் உண்டா என்று மல்லூர் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT