Last Updated : 24 Sep, 2018 03:32 PM

 

Published : 24 Sep 2018 03:32 PM
Last Updated : 24 Sep 2018 03:32 PM

இந்துக்களுக்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி

இந்துக்களுக்கு எதிரானவர்கள் போலவும், கடவுளுக்கு எதிரானவர்கள் போலவும் திமுகவை வேண்டுமென்றே சிலர் சித்திரிக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தி இந்துவுக்கு(ஆங்கிலம்) பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கடவுள் குறித்த நிலைப்பாட்டைப் பொதுக்குழுவில் முதல்முறையாக எடுத்திருக்கிறீர்கள். பாஜகவின் வளர்ச்சிக்குப் பின் கடவுளுக்கு எதிரான அல்லது மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தையோ மேற்கொள்வது கடினம் என்பதால் அந்த நிலைப்பாட்டை எடுத்தீர்களா அல்லது இந்துக்களுக்கு எதிரான திமுக என்ற நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டதா? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு முக ஸ்டாலின் அளித்த பதில்:

''இந்தக் கேள்விக்கு நான் விரிவாகப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஒன்றே கடவுள்,ஒருவனே தேவன் என்று அண்ணா அறிவித்து, நான் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன் என்றார். இந்தக் கருத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பலமுறை வலியுறுத்திப் பேசியுள்ளார். ஆனால், ஒரு தரப்பினர் இந்த உண்மைகளை வேண்டுமென்றே அழுத்தி, மறைத்து, எங்களை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும், கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் வேண்டுமென்றே சித்தரிக்கிறார்கள்.

கடவுள் குறித்து அண்ணா பேசும்போது, பாரதியாரின் வரிகளை எடுத்துப் பேசுகையில், அறியாமையே, ஆயிரம் கடவுள்களைத் தேடுகிறது என்றார்.

கருணாநிதி எப்போதும், பாகுபாடு இல்லாத வகையில் அணுகக்கூடியவர். தன்னுடைய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் ஒருபோதும் மற்றவர்கள் மீது திணிக்காதவர். கடவுள் மீதான நம்பிக்கைக்கும், மதத்தின் மீதான நம்பிக்கைக்கும் அவர் எதிரானவர் இல்லை. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவராகக் கருணாநிதி இருந்திருந்தால், ஏன் கபாலீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைத்து, தூர்வார வேண்டும்.

திருவண்ணாமலை கோயிலின் சிதிலமடைந்த ஒரு பகுதியை அவரே முன்வந்து ஏன் சீரமைக்க வேண்டும். 20 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த திருவாரூர் கோயில் தேரை 1969-ம் ஆண்டு ஓடவைக்க முயற்சிகள் எடுத்து, தன்னுடைய அமைச்சரவையில் இருந்த மனனி நாராயணசாமியை அந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வைத்தார்.

இந்துக்கள் குறித்து கருணாநிதி என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். விவேகானந்தர் போதித்தது போல் ஒவ்வொருவரும் இந்துத்துவா கருத்துகளைப் பின்பற்றி இருந்தால் அதைக் காட்டிலும் பெரிதாக இருந்திருக்காது. நான் அதற்கு எதிரானவன் இல்லை. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையாக இருப்பதால்தான் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்து, அவர்களிடையே நம்பிக்கை ஏற்பட அறிவுறுத்தினோம். அதேநேரத்தில், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அதனால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற கூற்றும் தவறானது.

கடவுள் குறித்து நான் பேசும் போது, அண்ணா, கருணாநிதி கூறிய கருத்துகளை மனதில் வைத்தே பேசினேன். கடவுளுக்கு எதிராக, மதத்துக்கு எதிராக திமுக ஒருபோதும் பிரச்சாரம் செய்தது இல்லை.

திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற விஷமத்தனமாக திமுக கடவுளுக்கும், இந்துக்களுக்கும் எதிரான கட்சி என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

சமூகத்தில் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் குலைக்கும் நோக்கில் நாட்டைத் துண்டாடும் எண்ணத்துடன், வகுப்புவாதத்தையும், அடிப்படை வாதத்தையும் பரப்புபவர்களுக்கு எதிராகவே திமுக பிரச்சாரம் செய்கிறது. எதிர்காலத்திலும் திமுகவின் இந்தப் பிரச்சாரம் தொடரும்.

பாஜக வளர்ந்து வருகிறது என்று நீங்கள் கூறியதைக் கேட்டபோதுதான் எனக்குச் சிரிப்பு வருகிறது. பாஜக வளர்கிறதா அல்லது வீழ்ச்சி அடைந்துவருகிறாதா என நடுநிலையான மக்களிடம் கேட்டால் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்''.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x