Published : 23 Sep 2018 03:01 PM
Last Updated : 23 Sep 2018 03:01 PM
தமிழக்தின் உள்மாவட்டங்கள், மேற்கு, தென் மாவட்டங்களில் இன்று காற்று, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் வானிலை குறித்து எழுதி வருகிறார். மழை குறித்து இன்று அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கிழக்கில் இருந்து வரும் காற்றும், மேற்கில் இருந்து வரும் காற்றும் மோதிக் கொள்வதால், இன்று தமிழகத்திலும், கேரளாவிலும் இடியுடன் கூடியமழைக்கு வாய்ப்பு உண்டு.
தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு. இந்த மழை வெப்பச்சலனத்தால் ஏற்படுகிறது.
மழை பெய்யத் தொடங்கும் போது அதிகமான காற்று முதலில் வீசக்கூடும் அதைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். உள்மாவட்டங்களில் காற்று பலமாக வீசும் என எதிர்பார்க்கலாம். இந்த மழை ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாகக் கேரள மாநிலத்தில் மழை நின்றிருந்த நிலையில், இன்று இடியுடன் கூடிய பருவமழையை எதிர்பார்க்கலாம்.
அதேபோல, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், திருப்பூர், ஊட்டி, திண்டுக்கல், கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், தமிழக்தின் மேற்குப்பகுதி, தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் வடதமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். பெரும்பாலும் காற்று, லேசான மழை, இடிமின்னல் எனக் கலந்து இருக்கும். பெங்களூரிலும் ஒரு சில இடங்களில் மழை இருக்கும்.
இடி,மின்னலுடன் மழை பெய்யும் போது மக்கள் உயரமான கட்டிடங்களில் ஏறி நிற்பதையும், மரத்தின் கீழும், இரும்பு தூணின் கீழும் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT