Published : 08 Sep 2018 11:48 AM
Last Updated : 08 Sep 2018 11:48 AM
முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டியில் துணை ஆணையர் ஜெயக்குமாரை கடுமையாகச் சாடியிருந்தார். இந்நிலையில் ஜார்ஜ் தன்னைக் குறி வைத்து தாக்குவதாக துணை ஆணையர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை குட்கா முறைகேடு விவகாரத்தில் பல மர்மங்கள் வெளியாகின. குட்கா முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து திமுக சிபிஐ விசாரணை கோரி தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகள் உட்பட 35 இடங்களில் ரெய்டு நடந்தது.
இதையடுத்து தனது மவுனத்தைக் கலைத்த முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், குட்கா ஊழல் நடைபெற்றதை ஒப்புக்கொண்டார், ஆனால் பணம்பெற்றதாகக் கூறப்படும் காலத்தில் நான் காவல் ஆணையராக இருக்கவில்லை, காவல் ஆணையர் மட்டுமே இதில் செயல்பட முடியும் என்று எண்ணுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி தனக்கு கீழும் அந்தக் காலகட்டத்திலும் பணியாற்றிய பல அதிகாரிகளை குற்றம் சாட்டினார்.
இதில் குட்கா முறைகேட்டில் இதுவரை பெயர்வராத இணை ஆணையர் வரதராஜு, துணை ஆணையர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை கடுமையாகச் சாடினார். இது குறித்து அப்போது துணை ஆணையராகவும் தற்போது விழுப்புரம் எஸ்.பி.யாகவும் இருக்கும் ஜெயக்குமாரிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பாகக் கேட்டபோது அவர் கூறியதாவது:
நேற்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஏகப்பட்ட புகார்களைத் தெரிவித்துள்ளாரே?
நான் இன்று விரிவாக சில நாளிதழ்களில் விளக்கம் கொடுத்துள்ளேன். அதுதான் என் தரப்பு பதில். நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஜார்ஜ் அந்த நேரத்தில் உங்களை விசாரித்தாரா?
நான் எது சொன்னாலும் அது எதிர்மறையாகப் போகும். உண்மையை நான் சொல்லவேண்டிய இடத்தில் சொல்வேன்.
கூடுதல் ஆணையர் நல்லசிவத்தை விசாரித்ததாகவும், இணை ஆணையர் வரதராஜுவிடம் உங்களைப் பற்றி விசாரித்ததாகவும் ஜார்ஜ் கூறுகிறார். உங்களிடம் நேரடியாக விசாரித்தாரா?
அவர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அவ்வளவுதான் நான் சொல்லமுடியும்.
அந்த நேரத்தில் நீங்கள்தானே விசாரணை அதிகாரியாக இருந்தீர்கள்?
விசாரணை அதிகாரி இல்லை, நாங்கள் ரெய்டு செய்து லோக்கலில் கொடுத்துவிட்டு வந்தோம். சிசிபி ரெய்டு செய்வோம், பக்கத்தில் கொடுத்து விடுவோம். அவர்கள் தான் விசாரணை நடத்துவார்கள். ரவுடிகளைப் பிடித்தால் பக்கத்து ஸ்டேஷனில்தான் ஒப்படைத்துவிடுவோம். இதுதான் நடைமுறை.
உங்களை திறமை இல்லாத அதிகாரி என்று ஜார்ஜ் கூறுகிறாரே?
நீங்கள் சென்னையில் என் பணியை நேரில் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அப்புறம் இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது. திறமையில்லாத அதிகாரி என்றால் அப்போதே தூக்கி எறிந்திருக்க வேண்டியதுதானே. எதற்கு என்னை வைத்திருக்க வேண்டும்.
இவ்வளவுநாள் இல்லாமல் இப்போது திடீரென ஜார்ஜ் உங்கள் மீது குற்றம் சாட்ட என்ன காரணம்?
மேல் மட்ட அரசியல் அது. மேல் லெவலில் நீங்கள் அதை ஆராய்ந்து பார்த்தீர்களேயானால் அது உங்களுக்குத் தெரியும். மேல் மட்டத்தில் அவர்களைக் குறிவைக்க முடியாததால் என்னைக் குறிவைக்கிறார்.
இவ்வாறு விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT