Last Updated : 19 Sep, 2018 04:04 PM

 

Published : 19 Sep 2018 04:04 PM
Last Updated : 19 Sep 2018 04:04 PM

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கூட்டணிக் கட்சியான திமுக போராட்டம் நடத்த முடிவு

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ஆறு மாதங்களாக ஊதியம் தராதது உள்ளிட்ட பிரச்சினைகளை புதுச்சேரி அரசு உடனடியாக தீர்க்காவிட்டால் ஆசிரியர், ஊழியர் போராட்டத்தை திமுக தலைமையேற்று நடத்தும் என அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்று ஆட்சியமைத்துள்ளனர். காங்கிரஸ் அரசு செயல்பாடுகளை அண்மைக்காலமாக திமுக கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாக குறிப்பிட்டு பல திட்டங்கள் செயல்பாட்டில் இல்லை. நிதி பிரச்சினை எனக் காரணம் காட்டி வரிகளை அதிக அளவில் புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து சட்டப்பேரவையில் திமுக கடுமையாக வாதிட்டது. பொதுக்கூட்டங்களிலும் திமுக அரசை விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதுச்சேரி அரசின் நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் நிரந்தர ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பிரதி மாதம் சம்பளம் சரியாக வழங்கப்படுவதில்லை. அங்கு 12 ஆண்டுகாலம் தற்காலிகமாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. நிலுவை சம்பளம், பணி நிரந்தரம் கோரி அவர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களைப் போராட்டத்திற்கு தள்ளிய அரசு அவர்களை அலைக்கழித்து வருவதை திமுக கண்டிக்கிறது.

குறிப்பாக அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் 600 நிரந்தர ஆசிரியர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்காமல் புதுச்சேரி அரசு செயல்படுகிறது. இதுபற்றி பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை.

ஆகவே புதுச்சேரி அரசு மற்ற விஷயங்களில் மெத்தனமாக இருப்பது போல் இந்த விவகாரத்தில் இருக்காமல் அரசுப் பள்ளிகளுக்கு நிகராக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு சலுகைகள் மற்றும் உரிமைகள் வழங்க வேண்டும். நிலுவை சம்பளம் வழங்க முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை திமுக தலைமையேற்று நடத்தும்'' என்று சிவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x