Published : 17 Sep 2014 09:34 AM
Last Updated : 17 Sep 2014 09:34 AM

ஸ்டாலின் மனம் மாறியதால் கருணாநிதி மகிழ்ச்சி: திமுகவில் திடீர் சுமுக முடிவு

கடந்த சில மாதங்களாக திமுகவில் நிலவிவந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதி தலைமையில்தான் ஆட்சி என ஸ்டாலின் கூறியுள்ளதால் மூத்த நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திமுகவில் கடந்த ஓராண்டாகவே அடுத்த தலைவர் மற்றும் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டன. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு கட்சியில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், திமுக பற்றி பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், கட்சி நடவடிக்கைகளில் கருணாநிதி தீவிரம் காட்டத் தொடங்கினார். ஸ்டாலினுக்கு ஆதரவாக கடிதம் எழுதிய அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, கருணாநிதியின் விசுவாசியான டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் ஸ்டாலின் தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது.

இதற்கிடையே, ‘2016-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதியை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். அப்போதுதான் திமுக தலைமையில் பெரிய கூட்டணி அமையும்’ என ஸ்டாலினுக்கு அரசியல் வல்லுநர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். இதுகுறித்து ‘தி இந்து’வில் செய்தி வெளியானது.

மவுனமாக இருந்த ஸ்டாலின்

இந்த ஆலோசனையை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவே அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை ஸ்டாலின் எங்கே பேசினாலும், ‘திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராவார்’ என்றுதான் கூறிவந்தார்.

ஆனால், சமீபகாலமாக அதுபோன்ற வார்த்தைகளை அவர் கூறவில்லை. மேலும், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று ஆதரவாளர்கள் குரல் கொடுத்தபோதும், மவுனமாகவே இருந்தார்.

இந்நிலையில், அரசியல் வல்லுநர்கள் ஆலோசனை கூறிய பிறகு திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘தலைவரின் அடி ஒற்றி நடப்பவன் நான். தலைவரின் அறிவு, ஆற்றல், அரசியல் வியூகம் ஆகிய குணங்களை பெற்றவர்கள் தோன்றுவது அரிது. எனக்கும் கருணாநிதிக்கும் இடையே பிளவை உருவாக்க முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய திமுக மூத்த நிர்வாகிகள் சிலர், “முப்பெரும் விழாவில் பேசிய ஸ்டாலின் தனது மனமாற்றத்தை உறுதிப்படுத்தி யுள்ளார். 2016-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில்தான் ஆட்சி என்று அவர் அறிவித்ததைக் கேட்டு அழகிரி, கனிமொழி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்டாலினின் இந்த மனமாற்றம் கருணாநிதிக்கும் மிகுந்த மன மகிழ்ச்சியை அளித்துள்ளது’’ என்றனர்.

ஸ்டாலின் தரப்பினர் கூறும்போது, ‘‘தலைவருக்கும் ஸ்டாலினுக்கும் எந்தப் பிரச்சினையும் எப்போதும் எழுந்ததில்லை. கருணாநிதிதான் அடுத்த முதல்வர் என்று ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். வேண்டுமென்றே இருவருக்கும் மோதல் இருப்பதுபோல சிலர் எழுதுகின்றனர். உண்மை நிலவரம் கட்சியினருக்கு தெரியும்’’ என்றனர்.

அழகிரி வருகை எப்போது?

மிசா பாண்டியனுடன் கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜீவன் ரமேஷ் ஆகியோரும் கருணாநிதியிடம் மன்னிப்பு கடிதம் அளித்தனர்.

அதில் தலைமை திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மிசா பாண்டியன் மட்டுமே கட்சியில் சேர்க்கப்பட்டார்.

இவர்கள் தவிர, மதுரையில் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்ட 20 பேர் இதுவரை விளக்கக் கடிதம் எழுதித் தரவில்லை. அந்த 22 பேரையும் கட்சியில் சேர்த்த பின்னரே, தான் கட்சிக்குள் வரமுடியும் என்று அழகிரி கூறியிருக்கிறார். எனவே, அவர்களிடம் கடிதம் பெற்று கட்சியில் சேர்க்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். அதன் பின்னர் அழகிரி கட்சிக்குள் வருவார் என்கின்றனர் திமுகவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x