Published : 03 Sep 2018 10:28 AM
Last Updated : 03 Sep 2018 10:28 AM
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொல்.திருமாவளவன் அரியலூர் அருகே குழுமூரில் மறைந்த அனிதாவின் இல்லத்தில் அவரின் நினைவுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் தனது சொந்த ஊரான அங்கனூரில் சனிக்கிழமை இரவு தங்கினார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திண்டிவனத்தில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து கீழ் எடையாளம் கிராமத்தில் பனை விதைகளை ஊன்றுவதற்காகச் சென்றார். அங்கே திருமாவளவனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதையறிந்த முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் விக்கிரவாண்டிக்கு வருமாறு கூறினார்.
அதன்படி விக்கிரவாண்டி சென்ற திருமாளவனுக்கு அங்கே இருந்த மருத்துவர் முகுந்தன் உள்ளிட்ட மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர். அப்போது விழுப்புரம் எஸ்.பி. ஜெயகுமார் தலைமையிலான போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முதலுதவிக்கு பின்னர், தொல்.திருமாவளவனை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் திங்கள்கிழமை மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசிக மாநில செயலாளரும், விசிக சமூக ஊடகத்தைக் கவனித்து வரும் சஜான் பராஜ் முகநூலில் வெளியிட்ட பதிவில், ''தொடர் பயணங்களால் உடல் ஒவ்வாமை காரணமாக அப்பல்லொ மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சாதாரண மருத்துவப் பரிசோதனை தான்.
மருத்துவர்கள் ஒய்வு எடுத்தால் மட்டும் போதும் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனால் ஐந்தாம் தேதி வரை தலைவரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. தலைவர் ஒய்வெடுக்கட்டும்.
தேவையற்ற வதந்திகளை முகநூலில் பரப்பவேண்டாம்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT