Last Updated : 28 Sep, 2018 07:46 AM

 

Published : 28 Sep 2018 07:46 AM
Last Updated : 28 Sep 2018 07:46 AM

குட்கா தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை முடிவு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நடவடிக்கை

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது இனிமேல் குற்ற வழக்குப் பதிவு செய்ய மாநில உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் புகையிலை மற்றும் நிக்கோட்டின் உள்ள குட்கா, பான் மசாலா மற்றும் வாயில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களைத் தயாரிக்க, இருப்பு வைக்க, விற்பனை செய்ய தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. ஆனால், பல இடங்களில் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பது தெரியவந்தால் அவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையினர், போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த பிறகு, அவற்றின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி, அந்த முடிவுகளின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கின்றனர். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குட்கா விற்பவர்களுக்கு அதிகபட்சம் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது. ஆனால், பெரும்பாலான வழக்குகளில் ரூ.10 ஆயிரம்கூட நீதிமன்றங்களில் அபராதம் விதிக்கப்படுவதில்லை. சிறைத் தண்டனை என்பது அரிதிலும் அரிதாகவே விதிக்கப்படு கிறது. இந்நிலையில்தான், முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி வழங்கியது.

மகாராஷ்டிர மாநில உணவு பாதுகாப்புத் துறையினர், குட்கா விற்பனை செய்த சில நபர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து விற்பனையாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்றம், ‘உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த தோடு, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாநில உணவுப் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்’ நிருபரிடம் கூறியதாவது:

இதுநாள்வரை உணவுப் பாது காப்புச் சட்டத்தின்கீழ் மட்டுமே குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வந்தோம். தற்போது உணவுப் பாதுகாப்புத் துறையினர் குற்ற வழக்குப் பதிவு செய்ய தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இனி உணவுப் பாதுகாப்புச் சட்டத்தோடு சேர்த்து, குற்ற வழக் கும் பதிவு செய்ய அதிகாரி களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். முன்பு குட்கா விற்பனையாளர் களிடமிருந்து பொருட்கள் மட் டும் பறிமுதல் செய்யப்படும். குற்ற வழக்கும் சேர்த்து பதிவு செய்யப் படும்போது அவர்களை போலீ ஸார் கைது செய்ய முடியும். விற் பனையாளர்கள் மீதான நடவடிக் கைகளை கடுமையாக்க இந்த உத்தரவு உதவும்” என்றார்.

காவல்துறையின் பங்கு

புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் சிறில் அலெக் சாண்டர் கூறும்போது, “புகை யிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தால் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட் கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, விநியோகம், விற்பனை தடை) சட்டம் COTPA-வின் கீழ்தான் வழக்குப் பதிவு செய்கின்றனர். இதன்மூலம், அதிகபட்சம் ரூ.200 வரை அபராதம் மட்டுமே விதிக்க முடியும். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சில இடங்களில் மட்டும் வழக்குப் பதிவு செய்யப் படுகிறது. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குறைவாக இருப்ப தால் காவல்துறையினரே சம்பந்தப் பட்டவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சட்டம் சொல்வது என்ன?

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188 (மனித உடலுக்கு கேடு விளைவித்தல்), 272 (கலப்படம்), 273 (நச்சுப்பொருளை விற்பனை செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும். பிரிவு 328-ன் கீழ் (உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் மதிமயக்கும் போதைப் பொருளை உட்கொள்ளும்படி செய்தல்) வழக்கு பதிவு செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். ஜாமீனில் வெளிவர முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x