Published : 05 Sep 2018 03:44 PM
Last Updated : 05 Sep 2018 03:44 PM
தமிழ்நாட்டில் பாலியல் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைக்க ‘வாஸ்’ எனப்படும் உலகப் பாலியல் சங்கம் முடிவு செய்துள்ளது.
பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் இந்தக் காலத்தில், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினை தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, உலக அளவிலும் காணப்படுகிறது.
எனவே, ‘வாஸ்’ எனப்படும் உலகப் பாலியல் சங்கம், இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காப்பது எப்படி என்பது குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கருத்தரங்குகள், விவாத மேடைகள், , விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 4-ம் தேதியை உலகப் பாலியல் சுகாதார தினமாக அறிவித்து, அன்றைய தினம் பல்வேறு செயல்திட்டங்களை அறிவித்து வருகிறது ‘வாஸ்’ அமைப்பு.
இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியப் பாலியல் கல்வி மையமும், ஆகாஷ் குழந்தையின்மைக்கான சிகிச்சை மையமும் இணைந்து, டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் ஆண்டுதோறும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை, அதிலும் மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீது கூட்டாக வன்கொடுமை போன்ற சம்பவங்கள் எதனால் ஏற்படுகின்றன? அதிலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த ஆண்டு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற இருக்கிறது.
மேலும், இருபாலருக்குமான பாலியல் மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகளுக்கான கண்காட்சியும் நடைபெறுகிறது. சென்னை, வடபழனி நூறடி சாலையில் உள்ள டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனையில் வருகிற 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாட்களும் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்தக் கண்காட்சியை நடத்தும் டாக்டர் காமராஜ், ‘வாஸ்’ அமைப்பின் பாலியல் உரிமைக்குழு உறுப்பினராகவும், ஜெயராணி காமராஜ் ‘வாஸ்’ மீடியா கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்கள், “இந்தக் கண்காட்சியின் இறுதியில் பாலியல் உரிமைக்கான கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். அத்துடன், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களைப் போன்றே தமிழகத்திலும் பாலியல் கல்வியை நடைமுறைத்தப்படுத்த வேண்டுமென ‘வாஸ்’ சார்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT