Published : 02 Sep 2018 01:34 AM
Last Updated : 02 Sep 2018 01:34 AM

பழநி மலைக் கோயிலுக்கு செல்ல இழுவை ரயிலில் பயணிக்க திண்டாடும் பக்தர்கள்: முதியோருக்கு சிறப்பு வழி ஏற்படுத்தித் தர வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டம் பழநிமலைக்கோயிலுக்கு இழுவை ரயிலில் (வின்ச்) செல்ல பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால்  முதியோர்கள், குழந்தைகளுடன் வரும்தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இவர்களுக்கு பயணத்தில் முன்னுரிமை தரும் வகையில் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநிமுருகப்பெருமானின் மூன்றாம் படை வீடு. இங்கு மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமியாக முருகப் பெருமான் காட்சி தருகிறார்.  கோயிலின் பிரசித்திபெற்ற  தைப்பூச விழா, பங்குனி உத்திரவிழாக் காலங்களில் ஆயிரக்கணக் கான பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி  கேரளா, கர்நாடகா மற்றும்வெளிநாடுகளில் இருந்தும் தமிழர்கள் முருகப் பெருமானை தரிசிக்க பழநிக்கு வருகின்றனர். தமிழகத்திலேயே அதிகம் உண்டியல் காணிக்கை வசூலாவது பழநியில்தான். ஆனால், பக்தர்களுக் கான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் கோயில் நிர்வாகம், இன்னமும் முழுமையான அக்கறை காட்டாமல் அலட்சியமாக இருந்து வருகிறது.

மலை அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை, இழுவை ரயில் (வின்ச்), ரோப்கார் ஆகிய வழிகளில் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்கின்றனர்.

இதில் படிப்பாதை, யானைப்பாதையை  குறிப்பிட்ட வயதினர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. குழந்தைகள், முதியோர் படிப்பாதை வழியாக (700 படிக்கட்டுகள்) மலைக்கோயில் செல்ல சிரமம் என்பதால் இவர்கள்  இழுவை ரயில் மூலம்  செல்கின்றனர்.

பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் செல்லும் வசதி உள்ள ரோப்கார் நிலையத்துக்குச் செல்வது என்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு சாத்தியமில்லாத நிலைதான் உள்ளது. காரணம் மலைக்கோயிலுக்கு பின்புறம்  அமைந்துள்ள ரோப்கார் நிலையத்துக்கு  காரில் செல்பவர்கள் எளிதில் சென்றடைகின்றனர்.

பேருந்து நிலையத்தில் இருந்து ரோப்கார் நிலையம் செல்ல பேருந்துவசதியும் இல்லை. இதனால் பேருந்துகளில் பழநி வருபவர்கள், பல கி.மீ. தூரம் நடந்து சென்று ரோப்கார் நிலையத்தை அடைவதால் பலரும் அதை தவிர்த்து இழுவை ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர்.

பழநி அடிவாரப் பகுதியில் இருந்து மலைக்கோயில் செல்ல 3 இழுவை ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒன்றில் ஒரு முறை 30 பேர் பயணிக்கலாம்.  விஞ்ச் மூலம்  மலைக்கோயிலை அடைய அதிகபட்சம் 8 நிமிடங்கள் ஆகின்றன.

3 இழுவை ரயில்களும் அடுத்தடுத்து இயங்கினாலும் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. குறுகிய இடத்தில் பக்தர்கள் காத்திருக்க வேண்டி இருப்பதாலும், இதில் ஒரு வரிசைமட்டுமே அமரும் வரிசை என்பதாலும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.  விசேஷ நாட்களில் 3 மணி நேரத்துக்கு மேலாகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது முதியோர்களும், குழந்தைகளும்தான். வரிசையில் காத்திருக்கும் இடத்தில் மின்விசிறி வசதிகூட செய்யப்படவில்லை.

இதுகுறித்து பழநிக்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் கூறியதாவது:

டி.கோபன், திருவனந்தபுரம்: நீண்டநேரம் இழுவை ரயில் நிலையத்தில் எனது மனைவியுடன் காத்திருக்கிறேன்.  எங்களுக்கான முறை எப்போது வரும் எனத் தெரியவில்லை. வயதான காலத்தில் நீண்டநேரம் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளதுபோல் சிரமமாக உள்ளது. இயற்கை உபாதைகளுக்கும் இடம் தேடவேண்டியுள்ளது.  வயதானவர் களுக்கு முன்னுரிமை அளித்து, ஒரு இழுவை ரயிலுக்கு 10 பேர் என இடம் ஒதுக்கினால் விரைவில் மலைக்கோயில் சென்று தரிசனம் செய்துவர ஏதுவாக இருக்கும் என்றார்.

எல்.மாரியாயி, திருச்சி:  என்னைப் போன்ற முதியவர்களை நீண்டநேரம் இழுவை ரயிலில் பயணம் செய்ய காக்கவைப்பதால் அதிக சிரமம் ஏற்படுகிறது. இதற்கு சிறப்புவழியை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார்.

எம்.சுப்பிரமணியன், சென்னை: குழந்தைகளை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் காத்திருப்பது சிரமமாக உள்ளது. குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. அவசரத்துக்குகூட வெளியேற முடியாமல் கம்பி தடுப்புகளால் அடைத்துள்ளதால் முதியோர் சிரமப்படுகின்றனர். உடல் ஊனமுற்றோர், முதியோர், குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு இழுவை ரயிலில் பயணிக்க கோயில் நிர்வாகம் முன்னுரிமை தர வேண்டும்  என்றார்.

இதுகுறித்து பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையர் செல்வராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை. அலைபேசி ‘சுவிட்ச் ஆப்’ல்இருந்தது. துணை ஆணையர்செந்தில்குமாரை தொடர்புகொண்ட போது, விடுப்பில் இருப்பதாக அலுவலகத்தில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x