Published : 22 Sep 2018 05:58 PM
Last Updated : 22 Sep 2018 05:58 PM
ஆத்தூர் அருகே குடும்பத்தக ராறில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற வந்த 2 குழந்தைகள் மற்றும் தாய் ஆகியோரில் தாயும், பெண் குழந்தையும் உயிரிழந்தனர். போலீஸ் விசாரணையில் கணவரே மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு தீ வைத்தது தெரிந்தது. இதையடுத்து, தற்கொலை வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு தலைமறைவான கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆத்தூரை அடுத்த செல்லியம் பாளையம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (31). ரிக் வண்டி தொழிலாளி. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியைச் அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்த பூமதி (26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களது குழந்தைகள் பூவசரன் (4) மற்றும் நிலாஸ்ரீ (3). கார்த்திக் அடிக்கடி மது போதையில் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
கடந்த 18-ம் தேதி வழக்கம்போல கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், பூமதி மற்றும் அவரது குழந்தைகள் பூவரசன், நிலாஸ்ரீ ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சிகிச்சையின்போது, பூமதி, குடும்பத் தகராறு காரணமாக குழந்தை களுடன் தான் தீக்குளித்ததாக மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இதையடுத்து, தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் பூமதி மீதும், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கார்த்திக் மீதும் ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
பின்னர் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து பூமதியிடம் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பூமதி மற்றும் அவரது குழந்தைகள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி கார்த்திக் தீ வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
''சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த கார்த்திக் தனது மனைவியுடன் வாக்குவாதம் முற்றிய நிலையில் பூமதி, குழந்தைகள் மீது கார்த்திக், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். ஆம்புலன்ஸில் பூமதி மற்றும் அவரது குழந்தைகளை கொண்டுவரும்போது, சம்பவம் குறித்து உண்மையை கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று பூமதியை, கார்த்திக் மிரட்டியுள்ளார்.
அதில், பயந்துபோன பூமதி தனது முதல் வாக்குமூலத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறினார். பின்னர் குழந்தைகளின் நிலை அறிந்த அவர், மீண்டும் அளித்த வாக்குமூலத்தில் கணவர் கார்த்திக்தான் தீ வைத்தார் என்று தெரிவித்துள்ளார்''.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பூமதியின் வாக்குமூலத்தை போலீஸார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில்,பூமதியும், அவரது மகள் நிலாஸ்ரீயும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து, போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர். பூவரசன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT