Published : 12 Sep 2018 12:59 PM
Last Updated : 12 Sep 2018 12:59 PM

உதகையில் குறிஞ்சி திருவிழா: படுகர் மக்களுடன் மாவட்ட ஆட்சியர் பாரம்பரிய நடனம்

நீலகிரி மாவட்டம் உதகை கல்லட்டி பகுதியில் முதல்முறையாக குறிஞ்சி விழா நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மாணவர்களோடு நடனமாடி மகிழ்ந்தார்.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் மிகவும் பசுமையும், இயற்கை அழகும் நிறைந்த மாவட்டமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு வருடா வருடம் கோடை காலத்தில் கோடை விழா மற்றும் பழக்கண்காட்சி, மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து, வெளிமாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அழகும் சிறப்புமிக்க இம்மாவட்டத்தில் மேலும் இம்மாவட்டத்திற்கு அழகு சேர்த்து பார்ப்பவர்களை கவரும் வண்ணம் குறிஞ்சி மலர் இங்குள்ள கல்லட்டி, கீழ்கோத்தகிரி மலைப்பகுதிகளில் வெகு அழகாக பூத்து குலுங்குகின்றன. இப்பூக்கள் 12 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் என்பதையும் இப்பூவின் சிறப்பு என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல்முறையாக இந்த வருடம் குறிஞ்சி விழா நடத்தப்பட்டது.

குறிஞ்சி பூவானது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான பழனி, ஆனைமலை, நீலகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை செப்டம்பர் மாதங்களில் அதிகமாக பூக்கும். கல்லட்டி மற்றும் கீழ்கோத்தகிரி பகுதிகளில் பூத்திருக்கும் குறிஞ்சி பூக்களை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினமும் சென்று கண்டுகளிக்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க சிறப்பு பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

விழாவை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் அ.சாந்திராமு மாணவிகளோடு இணைந்து படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x