Published : 06 Sep 2018 06:59 PM
Last Updated : 06 Sep 2018 06:59 PM
ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர், உடல் ரீதியான உறவு கொள்வது சட்ட விரோதமானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பெரும்பான்மை சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
சொல்கிறார்கள் எல்ஜிபிடி சமூகத்தினர்...
விக்ராந்த், சென்னை தோஸ்த் அமைப்பின் நிறுவனர், எல்ஜிபிடி ஆதரவாளர்:
தன் பாலின உறவாளர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாறு படைத்திருக்கிறது. எங்களின் 22 ஆண்டு காலப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மறைவாக இருந்த எம் சமூக மக்கள், தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
இப்போதுதான் சட்ட அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டிருக்கிறோம். பெரும்பான்மை சமூகத்தில் தங்களை அடையாளப்படுத்த முடியாமல் இத்தனை நாட்களாய் எல்ஜிபிடி ஆதரவாளர்கள் இருட்டறையில் வாழ்ந்தோம். இனி எங்களால் எங்களைப் பற்றி, எங்களின் உறவைப் பற்றி குடும்பத்தில் வெளிப்படையாகப் பேச முடியும்.
பண்டைய காலங்களில் காமசூத்ரா நூல், கஜூராஹோ சிற்பங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. மகாபாரதத்திலும் தன் பாலினத்தவர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் அதை ஜீரணிக்க முடியாத பெரும்பான்மை சமூகம் அவர்களை திருநங்கையாகக் காண்பித்தது. அந்நிலை மெல்ல மாறி வருகிறது.
இந்த தீர்ப்பால் பெரும்பான்மை சமூகத்தினர் சந்திக்கும் விளைவுகள் என்ன?
இந்தியாவில் தன் பாலின ஈர்ப்புக்கு அனுமதி கிடைத்திருப்பதால் பெரும்பான்மை சமூகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தீர்ப்பு பெரும்பான்மையினரின் இயல்பான வாழ்க்கைக்கு நிச்சயம் இடையூறாக இருக்காது. இந்த சட்ட அங்கீகாரம் எங்களுக்கு சமூக அடையாளத்தை அளித்திருக்கிறது, அவ்வளவே.
ஜெயா, திருநங்கை, 'சகோதரன்' அமைப்பு:
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இது. எல்ஜிபிடி சமூகத்தினரின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறலாம். இந்த சமூகமும் சட்டமும் இத்தனை நாட்களாக எங்களைக் குற்றவாளிகளாகவே வைத்திருந்தது. இனி நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பது நிம்மதியைத் தருகிறது.
தன் பாலினத்தவர்கள் பண்டைய காலங்களில் எல்லோரா, மொகஞ்சதாரோ சிற்பங்களிலேயே இருந்திருக்கிறார்கள். ஆனால் எங்களை மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறோம் என்று புறக்கணிப்பவர்கள், உடை, உணவு போன்றவற்றில் மேற்கத்திய பாணிகளைக் கடைபிடிக்கின்றார்களே?
எங்களை இயற்கைக்கு மாறானவர்கள் என்று கூறுகின்றனர். ஆண்- பெண் இணைதான் இயற்கையா? ஆணின் உயிரணுவையும் பெண்ணின் கருமுட்டையையும் சேர்த்து சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெறவில்லையா? இதை சமூகம் இயற்கை என்றுதானே ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதேபோல் எங்களையும் ஏற்றுக்கொள்ளும் நாள் விரைவில் வரும்.
தன் பாலினத்தவர் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகள்
தன் பாலினத்தவர்களில் ஏராளமானோர் தங்களுக்கான சமூக அடையாளம் இல்லாமல் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தீவிர மனஅழுத்தத்துக்கு உட்பட்டு மரணத்தையும் தேடியிருக்கின்றனர். நீதித்துறையின் தீர்ப்பு மூலம் இனி எல்ஜிபிடியினருக்கும், பெரும்பான்மை சமூகத்துக்கும் அவர்கள் யார் என்ற புரிதல் மேம்படும்.
தன் பாலினத்தவருக்கான சட்ட அனுமதி இல்லாததால் பாலியல் சார்ந்த மருத்துவ சேவைகளைப் பெறுவதில் இத்தனை நாட்கள் சிரமத்தை எதிர்கொண்டோம். இனி அது இருக்காது.
பொது சமூகமும் எல்ஜிபிடி சமூகமும் பரஸ்பரம் தொல்லை கொடுக்காமல், கேலி செய்யாமல் வாழ்ந்தால் சமுதாய உறவு மேம்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT