Published : 24 Sep 2018 09:09 AM
Last Updated : 24 Sep 2018 09:09 AM
மதுரை அருகே பெண் ஒருவர், இயற்கை விவசாயத்தில் வாடன் சம்பா, கிச்சலி சம்பா, துளசி சீரக சம்பா மற்றும் கருப்புக்கவுணி போன்ற பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட்டு அசத்தி வருகிறார்.
விவசாயம் ஆண்களுக்கான தொழில் என்பதை மாற்றி, தற்போது பெண்களும் இந்த துறையில் சாதிக்க ஆரம்பித்துள்ளார்கள். அதில் ஒரு படி மேலாக மதுரை கருப்பாயூரணி ஒத்தவீட்டைச் சேர்ந்த செல்வம். இவரது மனைவி புவனேஷ்வரி (52) என்பவர், இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயரிட்டு கூடுதல் மகசூலைப் பெற்று மற்ற விவசாயிகளை ஊக்கப்படுத்தி உள்ளார். மதுரை மாநகருக்கு மிக அருகிலே லட்சக்கணக்கில் விலைபோகும் நிலத்தை வீட்டு மனைகளாக்கி லாபம் பார்க்க ஆசைப்படாமல் இயற்கை விவ சாயத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு வானம் பார்த்த பூமியை தயார்ப்படுத்தி பாரம்பரிய நெல் பயிர்களைப் பயிரிட்டு வருகிறார்.
அவர் கூறியதாவது: ‘‘எனக்கு தஞ்சாவூர் பக்கம் கல்யாண ஓடை. எங்க ஊர்தான் காவிரி ஆற்றின் கடைசி கடைமடை. எங்க குடும்பத்தில் 100 ஏக்கர் விவசாயம் செய்தோம். விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில்தான் எங்கப்பா எங்களைப் படிக்க வைச்சார்.
ஒரு கட்டத்தில் தண்ணீர் பற்றாக் குறையால் விவசாயமே வேண்டாம் என்று அப்பா ஒதுங்கி கொண்டார்.அண்ணன், தம்பிகளை வேறு தொழில்களுக்கு திருப்பிவிட்டார். என்னை மதுரையில் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்ததால் எனக்கு விவசாயம் பார்க்கணும்னு ஆசை. புகுந்த வீட்டில் கணவர், குழந்தைகள் என்று குடும்ப வேலைகளே எனக்கு சரியாக இருந்தது. அத்தை, மாமாதான் விவசாயத்தை கவனித்துக் கொண்டனர்.
பிள்ளைகளைப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்த தும், நிறைய நேரம் கிடைக்க ஆரம் பித்தது. சும்மா இருப்பதற்கு இயற்கை விவசாயம் பார்க்க லாம்னு ஆசை வந்தது. அதுவும், பாரம்பரிய நெல் பயிர்களைப் பயிரிடணும் நினைத்தேன். வீட்டுல சொன்னதும், அதுவெல்லாம் ஆகுற வேலையில்லை என்று சொல்லிட்டாங்க. பின்னர் போராடி 2013-ல் 1 ½ ஏக்கரில் நெல் பயிரிட அனுமதித்தனர். அந்த நிலத்தில் சோனா பொன்னி பயிரிட ஆரம் பித்தேன். எனக்கோ அனுபவம் இல்லை. நமக்காவது நல்லவிதமாக சாப்பிட அரிசி கிடைக்கும்ன்னு லாபத்தை எதிர்பார்க்காமல் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன்.
வீட்டிலே மாடுகளை வளர்த்த தால் நிலத்தை உழுததும், மாட்டு சாணத்தைப் போட்டேன். ஒரு ஏக்கருக்கு 100 கிலோ மண் புழு உரம். 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு போட்டேன்.
ஆரம்பத்தில் நிறைய பூச்சித் தொல்லை, நோய்கள் வந்தது. ‘நடைமுறைக்கு ஒத்து வராது, மருந்து போடுங்கள் ’ என்றார்கள் வேலை பார்த்த தொழிலாளர்கள். நான் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. சாணம், கோமியத்துடன் பாசிப்பயிறு மாவு, வெல்லம் கலந்து நேரடியாக கரைத்து ஊற்றினேன். தண்ணீர் பாய்ச்சும்போது வாமடையில் வைத்தும் விட்டேன். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலும் போட்டேன். சில பூச்சி விரட்டிகளையும் அடித்தேன். அதன்பிறகு எந்த பிரச்சினையும் வரவில்லை. ஒன்றரை ஏக்கரில் 26 முட்டைகளை அறுவடை செய் தேன். எதுவுமே தெரியாமல் ஆரம் பித்தபோதே இந்த மகசூல் கிடைத்ததால் நம்பிக்கை ஏற்பட்டது. முதல் முறை பயிரிட்டதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு அடுத் தடுத்த முறை கருப்பு கவுணி, துளசி சீரக சம்பா, கிச்சிலி சம்பா, வாடம் சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட ஆரம் பித்தேன். இந்த நெல் ரகங்கள் 150, 130, 120, 110 நாட்களில் விளைச்சலுக்கு வரக்கூடியது. எல்லாவற்றையும் ஒற்றை நாற்று முறையில் பயிரிட்டேன்.
கடந்த ஆண்டு கிச்சிலி சம்பா பயிரிட்டு 2 ¼ ஏக்கரில் 65 முட் டைகள் எடுத்தேன். முன்னப்பின்ன அனுபவம் இல்லாத என்னாலே இதைச் செய்ய முடிகிறது என்றால் மற்ற விவசாயிகள் கையில் எடுத் தால் பாரம்பரிய நெல் விவசாயத் தில் நிறைய சாதிக்கலாம்.
தற்போது 9 ஏக்கரில் கிச்சிலி சம்பாவும், குழி வெடிச்சான் நெல் ரகங்களையும் சாகுபடி செய்துள் ளேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT