Last Updated : 04 Sep, 2018 01:10 PM

 

Published : 04 Sep 2018 01:10 PM
Last Updated : 04 Sep 2018 01:10 PM

சோபியாவுக்கு ஜாமீன்: தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சோபியா (28). இவர் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார். இந்நிலையில், இவர் திங்கள்கிழமை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணித்தார். அதே விமானத்தில் அப்பெண்ணின் இருக்கைக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணித்தார். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் அந்த விமானத்தில் இருப்பதை அறிந்த சோபியா, ‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, தமிழிசை எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார்.

நண்பகலில் விமானம் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சோபியா மீண்டும் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வரவேற்பறையில் “விமானத்தில் இப்படிச் சொல்வது சரியா?” என தமிழிசை அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். இதனால், அப்பெண்ணுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழிசை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பயணித்த இண்டிகோ அதிகாரிகளிடமும் புகார் அளித்தார். அதிகாரிகள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்தனர். இதையடுத்து தமிழிசை அங்கிருந்து திருநெல்வேலி சென்றார்.

சோபியா மீது ஐபிசி பிரிவு 505 (1) (பி) பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளுதல், ஐபிசி 290 பொதுஇடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவித்தல், தமிழ்நாடு சிட்டி போலீஸ் பிரிவு 75 போலீஸாருக்கு ஒத்துழைக்காதது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன்பின், போலீஸார் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற 3-வது நீதிபதி தமிழ்ச்செல்வி வீட்டில் இரவில் சோபியாவை ஆஜர்படுத்தினர். அப்போது ஐபிசி பிரிவு 505 (1) (பி) இதற்குப் பொருந்தாது என ரத்து செய்து, மற்ற இரு வழக்குகளில் சோபியாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் நெல்லை மகளிர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அப்பெண்ணின் வழக்கறிஞர் அதே நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x