Published : 22 Sep 2018 10:23 AM
Last Updated : 22 Sep 2018 10:23 AM

உசிலம்பட்டியில் மீண்டும் துளிர்விடும் சிசுக்கொலைகள்- கருக்கலைப்பில் கர்ப்பிணி இறந்த பின்னணியில் அதிர்ச்சி தகவல்

பெண்களைக் கவுரவமாகப் பார்க்கும் தமிழகத்தில்தான் பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அநேகம் பேர் தயக்கம் காட்டுகின்றனர்.

கருவில் இருக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதைத் தடுப்பதற்குச் சட்டம் இருந்தும், கருக்கலைப்பை இன்னமும் முழுமையாக தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல், தேனி,சேலம்,கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கடந்த காலங்களில் சிசுக்கொலைகள் அதிகளவு நடந்தன.

குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுக்களை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடந்தன.

தொட்டில் குழந்தை திட்டம்

பொதுநல அமைப்புகள் களஆய்வுமேற்கொண்டு உசிலம்பட்டிபகுதி சிசுக்கொலைகளையும்,  கருக்கொலைகளையும்  வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. பிறகுஅரசு விழித்துக்கொண்டு சிசுக்கொலைகளைத் தடுக்க 1991-ல்தொட்டில் குழந்தைகள் திட்டத்தைஅறிமுகப்படுத்தியது. 

மருத்துவமனைகளை,ஸ்கேன் மையங்களைக் கண்காணிப்பது, பெண் சிசுக்களை கொலை செய்தால் கொலை வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தற்போது இந்தச் சம்பவங்கள்  கட்டுப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தில் கருக்கலைப்பு செய்யமுயன்றபோது 5 மாத கர்ப்பிணி ராமுத்தாய் உயிரிழந்தார்.

மீண்டும் கருக்கலைப்பா?

இச்சம்பவம், உசிலம்பட்டியில் மீண்டும் சிசுக் கொலைகள், கருக்கலைப்புகள் துளிர்விடுகிறதா?  இதுபோன்ற கருக்கொலைகள் தமிழகத்தில் சத்தமில்லாமல்  நடக்கிறதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.

உயிரிழந்த கர்ப்பிணி  ராமுத்தாய்க்கு ஏற்கெனவே 3 பெண்குழந்தைகள் உள்ளனர். நான்காவதாக அவர் கர்ப்பமானார்.

இந்தக் குழந்தையும் பெண்ணாக இருக்குமோ என நினைத்து உசிலம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கருவை கலைக்கச் சென்றுள்ளார் அவர்கள் மறுத்துள்ளனர். அதனால், அங்கு பணிபுரிந்த செவிலியர் லட்சுமியை நாடியுள்ளார். அந்த செவிலியர் அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று கருவை கலைக்க முயன்றபோது ரத்தப்போக்கு அதிகமாகி கர்ப்பிணி  ராமுத்தாய் உயிரிழந்தார்.

உசிலம்பட்டி போலீஸார் விசாரித்து, வயிற்றுக்குள் வளரும் சிசுவைக் கலைக்க முற்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, மருத்துவம் அல்லாத பணியைச் செய்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கருக்கலைப்பு செய்த செவிலியர் லட்சுமியை கைது செய்தனர்.

கிராமங்களில் மூட நம்பிக்கை

உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமியிடம் பேசியபோது,  ‘‘பிரேதப் பரிசோதனையில் ராமுத்தாய் கருவில்  ஆண் குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது. கிராமங்களில் வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை என்று கணிக்கக்கூடிய மூடநம்பிக்கை இன்றைக்கும் உள்ளது.

அவரை யாரோ தவறாக வழிகாட்டியதால் 4-வது குழந்தையும் பெண் குழந்தையாக இருக்குமோ என்று எண்ணி கருவைகலைக்க அந்தச் செவிலியரைஅணுகி உள்ளார். அவரும், ஒருகணிசமான தொகைக்கு ஆசைப்பட்டு கருக்கலைப்பு செய்தபோது  ராமுத்தாய் உயிரிழந்துள்ளார்’’ என்றார்.

சுகாதாரத் துறை உயர் அதிகாரி கூறும்போது,  "தனியார் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அந்த கர்ப்பிணியின் குடும்பத்தினர் ஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளனர். அவர்கள் பாலினத்தைச் சொல்லவில்லை.  செவிலியர் லட்சுமிதான் கர்ப்பிணியின் குடும்பத்தினரிடம் ஏதோ ஒரு வகையில் கருவில் இருப்பது பெண் குழந்தை என்று ஏமாற்றி இருப்பதாக அறிகிறோம்.

அதனால், கருவைக் கலைக்கஅந்த செவிலியர் உதவியை நாடியிருக்கலாம். அவர் ராமுத்தாயை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்யும்போது இந்த விபரீதம் நடந்துள்ளது’’ என்றார்.

கள ஆய்வில் தன்னார்வலர்கள்

இறந்த ராமுத்தாய்க்கு கருவில் இருந்த குழந்தை, பெண் குழந்தை என்பதைத் தெரியப்படுத்திய ஸ்கேன் சென்டர் எது? அவர்கள் தெரியப்படுத்தாத நிலையில்செவிலியர் பணத்துக்காக பாலினத்தை தவறாகக் கூறி கருக்கலைப்பு செய்தாரா அல்லது கருக்கலைப்பு செய்தார் என்ற காரணத்துக்காக ஒட்டுமொத்தப் பழியையும் அவர் மீது சுமத்தப் பார்க்கிறார்களா போன்ற சர்ச்சையான கேள்விகள் எழுந்துள்ளன.ராமுத்தாயின் மரணத்தை தற்போது கள ஆய்வு செய்ய தன்னார்வ அமைப்பினர், வழக்கறிஞர்கள் உசிலம்பட்டியில் குவிந்துள்ளனர்.

பதிவாகாத கருக்கலைப்புகள்

உசிலம்பட்டியில் கள ஆய்வு மேற்கொண்ட வழக்கறிஞர் எஸ்.செல்வகோமதி கூறுகையில், ‘‘கருக்கலைப்புகள்  பதிவாகாமல் இருப்பதாலே அவை வெளியே தெரியாமல் இருக்கின்றன. கர்ப்பிணி ராமுத்தாய் கருக்கலைப்புச் செய்தபோது இறந்துவிட்டதால்தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பது காரணமாகவே கருவிலே பெண் சிசுக்களை கலைக்கும் மனோபாவம் தொடருகிறது.

கருக்கலைப்பை முற்றிலும் தடுக்க ஸ்கேன் சென்டர்களை கண்காணிக்க வேண்டும். ஆனால், அதுபோன்று எதுவும் நடப்பதில்லை.  சமூக நிர்பந்தம்,  குடும்பத்தினரின் நெருக்கடியால்  ஒரு பெண் கருக்கலைப்புக்கு உடன்படுகிறார். டாஸ்மாக் கடைகளால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். 10 விதவைகளைச் சந்தித்தால் அதில் 7 பேருடைய கணவர்கள், குடியால் இறந்துள்ளனர். குடிகார கணவர்களால் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

தற்போது பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கான வரதட்சணை அதிகமாகிவிட்டது. பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பைப் பற்றி நிறையப் பேசினாலும் இன்னமும் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கின்றன. அதனால், பொருளாதாரத்தில், கல்வியறிவில் பின்தங்கியவர்கள்  பெண் குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

டாஸ்மாக் கடைகள் இல்லாத சமுதாயத்தை எப்போது உருவாக்குகிறோமோ அப்போதுதான் இந்த கருக்கலைப்பு, பெண்கள் மீதான வன்முறை, பெண் சிசுக்கொலைகளைத் தடுக்க முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x