Published : 26 Sep 2018 08:43 AM
Last Updated : 26 Sep 2018 08:43 AM

குஜராத் சபர்மதி ஆறுபோல் அழகாகும் வைகை: மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.150 கோடியில் செயல்படுத்த ஏற்பாடு 

மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் குஜராத் சபர்மதி ஆற்றைப் போல், வைகை ஆற்றை ரூ.150 கோடி செலவில் அழகாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாற்ற ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, உயர் அதிகாரிகள் சிலர் மேலை நாடு களுக்குச் சென்று, அங்கு நகரங் களின் அமைப்பை அறிந்துவர விரும்பினர். அதற்கு காமராஜர் ‘‘மதுரைக்குச் சென்று பாருங்கள், அதைவிட சிறந்த நகரமைப்பு இங்கு உள்ளது’’ என்றாராம்.

அப்படிப்பட்ட வரலாற்றுப் பெருமையும், சிறப்பும் வாய்ந்த மதுரை, கடந்த கால் நூற்றாண்டாக மிகவும் பின்தங்கி உள்ளது. ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய வைகை ஆறு, தற்போது அத்தி பூத்தாற்போல எப்போதாவது தண் ணீர் ஓடும் அளவுக்கு வறண்டு போனதே அதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் வைகை ஆற்றில் தினமும் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதால் சென்னை கூவம் நதி யோடு ஒப்பிடும் அளவுக்கு வைகை யின் பெருமை மங்கி விட்டது.

தற்போது மதுரை மாநகராட்சி ஆணையாளராக அனீஷ்சேகர் பொறுப்பேற்ற பிறகு, வைகை ஆற்றுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்பட்டு, அதனை ‘ஸ்மார்ட் சிட்டி’ யில் ஒரு கலாச்சார மையமாக மாற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன.

சுற்றுலாத் தலமாக்கும் திட்டம்

இந்நிலையில் வைகை ஆற்றை மீட்டெடுக்கவும், அழகாக்கவும் நீர் வழிச்சாலைத் திட்டப் பொறியாளர் ஏ.சி.காமராஜ் தலைமையில் ‘நவாட் டெக்’ பொறியாளர் குழு கடந்த வாரம் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்தது.

அப்போது, குஜராத்தில் ஆண்டு முழுவதும் நீரோட்டமுள்ள சபர் மதி ஆற்றைப் போல வைகை ஆற்றையும் ரூ.150 கோடி மதிப் பீட்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தை ஆட்சியரிடம் முன்வைத்துள்ளனர். அந்த திட்டத்தைப் பார்த்து வியந்துபோன ஆட்சியர், தற்போது இந்த திட்டத்தை ‘ஸ்மார்ட் சிட்டி’யில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாசடைந்த வைகை ஆறு

இதுகுறித்து பொறியாளர் ஏ.சி. காமராஜ் கூறியதாவது: மதுரை மாநகர் உருவானதும், வளர்ச்சி அடைந்ததும் வைகை ஆற்றைப் பின்புலமாக வைத்துதான். தற் போது அந்த ஆறு நீரோட்டமின்றி மாசடைந்துள்ளது. அதிலிருந்து மீட்கவே ஆட்சியரிடம் இந்த திட் டத்தை பரிந்துரைத்தோம். இந்த திட்டம் முன்னாள் பொதுப் பணித்துறை பொறியாளர்கள் பலருடன் கலந்து ஆலோசித்து தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாள ருக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றின் சராசரி அக லம் 240 மீட்டர். நதியின் இருபுறங் களிலும் 20 மீ. இடைவெளி விட்டு, இதில் 6 மீட்டர் அகலம் நடை பாதையாகவும், மீதமுள்ள பகுதி இருவழி போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படும். நதியின் அகலம் ஒரே சீராக 200 மீ. அமைக்கப்படும்.

வைகை நதியின் அழகை புத்துணர்ச்சியோடு மீட்டெடுக்க இத்திட்டத்தை சிவில் நிர்வாகம், பொதுப்பணித் துறை, சமூக ஆர் வலர்கள் துணையோடு செயல் படுத்த ‘நவாட் டெக்' முயற்சி எடுத்து வருகிறது. இத்திட்டத்துக்கு ஆகும் மொத்த செலவு 150 கோடி ரூபாய். இத்திட்டத்துக்கான செய லாக்க ஆய்வு, விரிவான ஆய்வு அறிக்கை, செயலாக்கம் ஆகியன வும் இதில் அடங்கும்.

இத்திட்டத்தில் கழிவுநீர் வைகை யில் கலக்காமல் ஆற்றின் கரை நெடுக குழாய் அமைத்து அதன் வழியாக மறு சுழற்சி மையத்துக்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படும். சாலையை அகலப்படுத்துவதன் மூலம் இருவழிச் சாலையாக மாறுவ தோடு நெரிசலையும் கட்டுப்படுத் தலாம். குஜராத்தில் சபர்மதி ஆற்றில் இதுபோன்று சாதனை செய்துள்ளார்கள்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில், ‘நவாட் டெக்'கின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், வைகை ஆறு புதுப் பொலிவு பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வைகை அணை சட்டம் என்ன சொல்கிறது?

‘‘வைகை அணை கட்டும்போதே, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்கள் வைகையின் இயற்கை நீரோட்டத்தைப் பெற வேண்டுமென்றும், வைகை ஆற்றின் இயற்கையான நீரோட்டத்தை தடுத்து தேக்கி வைக்கக்கூடாது என்றும், பெரியாறு அணை நீரை மட்டுமே தேக்கி வைக்க வேண்டும் என்றும் அரசாணை (எண் : 25/ 1689, 25.11.1974) சொல்கிறது. அந்த சட்டம் நடைமுறையில் இருந்தபோது தண்ணீர் பஞ்சம் குறைவாக இருந்தது. அதன்பின்னர், வைகை ஆற்றில் இயற்கையாக வந்த தண் ணீரை அணையில் அடைத்து வைத் தனர். இயற்கையான நீரோட்டம் இருந்தால்தான் வைகையும் வறண்டு விடாது.

வைகை அணை கட்டும்போது உருவாக்கப்பட்ட சட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தினால் வைகை ஆற்றில் நீரோட்டம் ஆண்டு முழுவதும் இருக்கும். வைகை ஆறு பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்’’ என்றார் பொறியாளர் ஏ.சி.காமராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x