Published : 03 Jun 2019 05:56 PM
Last Updated : 03 Jun 2019 05:56 PM
திருப்பத்தூரில் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல் ஆய்வாளர் ஆவேசத்துடன் அறிவுரை கூறிய வீடியோ இணையதளங்கில் வைரலாகப் பரவி வருகிறது.
வேலூர் மாவட்டத்தின் மிக முக்கிய நகரமாக திருப்பத்தூர் விளங்கி வருகிறது. இங்குள்ள சாலைகள் குறுகிய சாலைகள் என்பதால் போக்குவரத்து நெரிசல் எப்போதுமே இருக்கும். குறிப்பாக திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலை, திருப்பத்தூர் - சேலம் சாலை, திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் பகல் நேரங்களில் எளிதாகச் சென்று வர முடியாத நிலை ஏற்படும்.
திருப்பத்தூர் நகரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. சாலை விதிகளை வாகன ஓட்டிகள் முறையாகப் பின்பற்றாததினால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் பெரும் அளவில் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க போக்குவரத்து போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும் உரிய பயனை அளிக்கவில்லை.
ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா என்ற பெயரில் போலீஸார் எவ்வளவு தான் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டத்துக்கே வாகனங்களை ஓட்டி வருவதாகவும், சாலை விதிமுறைகளை யாருமே கடைப்பிடிப்பதில்லை என்றும் போலீஸார் ஆதங்கப்படுகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் மதனலோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாலுகா காவல் நிலையம் முன்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். சுட்டெரிக்கும் வெயிலில் வேகவேகமாகச் சென்ற வாகன ஓட்டிகளை தன் காவலர்களைக் கொண்டு தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் மதனலோகன் சட்டென ரோட்டுக்கு வந்து கையில் மைக்கை எடுத்தார்.
பிறகு, திருப்பத்தூர் - சேலம் பிரதான சாலையின் இருபுறமும் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்களை நிறுத்திய காவல் ஆய்வாளர் மதனலோகன் வாகன ஓட்டிகளைப் பார்த்து பேசியதாவது:
"திருப்பத்தூரில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்க யார் காரணம்? வாகன ஓட்டிகள் விதிகளை முறையாகப் பின்பற்றுவது இல்லை. இங்குள்ள அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தைகளை நினைத்து வாகனங்களை ஓட்ட வேண்டும். உங்களை நம்பியே உங்கள் குடும்பத்தினர் உள்ளனர்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ரூ.1,000 செலவழித்தால் தரமான ஹெல்மெட் கிடைக்கும். உயிரைக் காக்க ரூ.1,000 செலவழிக்கக்கூடாதா ? நான் இங்கு காவல் ஆய்வாளராக வந்து 2 மாதங்கள் ஆகிறது. இதில், 18 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். நினைத்தாலே உடல் நடுங்குகிறது. திருப்பத்தூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஹெல்மெட் அணிந்து மிதமான வேகத்தில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும். பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பைக் கொடுத்தால் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம்"
இவ்வாறு மதனலோகன் கூறினார்.
ஆய்வாளர் மதனலோகன் அறிவுரை வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பத்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் மதனலோகன் கோபத்துடனும், ஆதங்கத்துடன் கூறிய அறிவுரைகளை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் பொறுமையாகக் கேட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT