Published : 13 Jun 2019 12:00 AM
Last Updated : 13 Jun 2019 12:00 AM
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, மருந்து வாங்க அதிகம் செலவாகும்போது, குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என நினைத்து மருந்து சாப்பிடாமலே இருப்பவர்கள் ஏராளம்.
இந்நிலையில்தான், ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் ‘மக்கள் நல மருந்தகங்கள்’ எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்து வருகிறது.
இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்களின் விலையை விட 50 முதல் 90% வரை குறைவாக இருக்கின்றன. இதனால், மக்கள் நல மருந்தகங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் மட்டும் 50 ‘மக்கள் நல மருந்தகங்கள்’ செயல்படுகின்றன. இதேபோல, தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மக்கள் மருந்தகங்களின் விவரத்தை மத்திய அரசின் http://janaushadhi.gov.in/StoreDetails.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
என்னென்ன மருந்துகள்?
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வயிறுகோளாறுகள், காசநோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன. மற்ற மருந்தகங்களில் பிராண்டட் நிறுவனத்தின் ‘ஐ டிராப்’ வாங்கினால் ரூ.200 செலவாகும். அதையே இங்கு வாங்கினால் ரூ.40 மட்டுமே செலவாகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவி, வெளிச் சந்தையில் ரூ.1,500-க்கு விற்கப்படுகிறது. இங்கு அதன் விலை ரூ.480 மட்டுமே. பெண்களுக்கான 4 நாப்கின்கள் கொண்ட பாக்கெட் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. அதையே வெளியில் வாங்கினால் இருமடங்கு செலவாகும். மருந்துகள் தவிர ‘பெயின் கில்லர்’, ‘ஆன்டிசெப்டிக் லிக்விட்’ உள்ளிட்டவையும் இங்கு குறைந்த விலையில் கிடைக்கின்றன.
இதுதொடர்பாக கோவை ஒண்டிபுதூர் நெசவாளர் காலனியில் மக்கள் மருந்தகத்தை நடத்திவரும் சங்கீதா குருமூர்த்தி கூறும்போது, “எந்த பிராண்ட் பெயரில் மருத்துவர் மருந்து எழுதிக்கொடுத்தாரோ அதே பெயரில் மருந்து வாங்க வேண்டும் என நோயாளிகள் நினைக்கின்றனர். இன்னும் பெரும்பாலானோருக்கு ‘ஜெனரிக்' மருந்துகள் குறித்த புரிதல் இல்லை. விலை அதிகமான மாத்திரைதான் அதிக பலன் அளிக்கும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.
சர்க்கரை நோய்க்கான (Glimisave mv2) 15 மாத்திரைகள் கொண்ட அட்டையை வெளியில் வாங்கினால் ரூ.232 செலவாகும். அதே மாத்திரை இங்கு ரூ.29-க்கு விற்கப்படுகிறது. அதேபோல உயர் ரத்த அழுத்தத்துக்காக (Telma H) 15 மாத்திரைகள் கொண்ட அட்டை, வெளியில் ரூ.221-க்கு விற்கப்படுகிறது. இங்கு ரூ.12 மட்டுமே. எனவே, பிராண்ட் பெயரில் உள்ள மருந்துகளுக்கு இணையாக ஜெனரிக் (பொதுப்பெயரில்) மருந்துகளின் பெயர்களை மருத்துவர்கள் எழுதிக்கொடுத்தால் பலர் பயன்பெறுவார்கள்” என்றார்.
‘ஜெனரிக்’ மருந்தின் தரம்
கோவை மண்டல உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் எஸ்.குருபாரதி கூறும்போது, “‘ ஜெனரிக்' மருந்துகள் ‘பிராண்டட்' மருந்துகளைவிட எந்த வகையிலும் தரத்தில் குறைவானவை அல்ல. பிராண்டட் மருந்துகளில் உள்ள அதே மூலக்கூறுகள்தான் ஜெனரிக் மருந்துகளிலும் இருக்கும். உதாரணமாக, ‘குரோசின்’, ‘கால்பால்’ போன்றவை காய்ச்சலுக்கான பிராண்டட் மாத்திரைகள். அதே மாத்திரையை, அதன் மூலப்பொருளாக விளங்கும் ‘பாராசிடமால்' என்ற பொதுவான (ஜெனரிக்) பெயரில் மருந்தகங்களில் பெறலாம். எனவே, நோய்களுக்கான மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கும்போது, மூலக்கூறுகளின் பெயரையும் நோயாளிகள் கேட்டுப் பெற்று பயனடையலாம்” என்றார்.
விலை குறைவு ஏன்?
“மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக செலவு செய்து புதிதாக கண்டுபிடித்த மருந்தை குறிப்பிட்ட காலத்துக்கு விற்க காப்புரிமை (பேடன்ட்) பெற்று இருக்கும். ஒவ்வொரு மருந்துக்கும் இந்த காப்புரிமை காலம் வேறுபடும். அந்த காப்புரிமை காலம் நிறைவடைந்த பிறகு அதே மூலக்கூறுகள் கொண்ட மருந்தை மற்ற நிறுவனங்களும் தயாரித்து விற்கலாம். இவ்வாறு பல நிறுவனங்கள் ஒரே மருந்தை தயாரிக்கும்போது விலை குறைகிறது. மேலும், பிராண்ட் பெயரில் விற்காமல் பொதுவான பெயரில் விற்பதால் மார்க்கெட்டிங் செலவு, விளம்பர செலவு போன்றவை இல்லை. மருந்துகள் நேரடியாக மருந்தகங்களுக்கு சென்று சேருகின்றன. இதனால், விலை பெருமளவு குறைகிறது” என மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT