Published : 11 Jun 2019 12:59 PM
Last Updated : 11 Jun 2019 12:59 PM
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் பழுதானது. இதனால் அவரது பேருந்திலேயே இறுதிச் சடங்கு நடக்கும் இடத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது சொந்த ஊரான மரக்காணம் அடுத்த ஆலத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வாகனத்தைத் தொடர்ந்து அவரது பேருந்துகளும் உடன் வந்தன.
செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்ட கூனிமேட்டில் அலங்கார வாகனம் பழுதானது. இதையடுத்து பழுதுநீக்கும் பணி தொடங்கியது. ஆனால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் நகரவில்லை. இதையடுத்து வாகனத்தில் கயிறு கட்டி வாகனத்தில் இணைத்தும் வாகனம் நகரவில்லை.
அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வரின் உடல் அவரது ஊருக்குச் செல்லும் அவரது பேருந்தில் ஏற்றி உடல் அடக்கம் செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஓட்டுநராகப் பணியைத் தொடக்கிய முன்னாள் முதல்வர் ஜானகிராமன், கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோருக்கு ஓட்டுநராக இருந்தவர். அத்துடன் முக்கியத் தலைவர்களான அண்ணா, இந்திரா காந்தி ஆகியோருக்கும் வாகனத்தை இயக்கியவர். இறுதிச் சடங்கில் அவருக்குச் சொந்தமான பேருந்திலேயே சொந்த ஊருக்கு அவரது இறுதிப் பயணம் அமைந்ததாக அங்கிருந்தோர் தங்கள் பேச்சில் குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT