Published : 22 Jun 2019 09:36 AM
Last Updated : 22 Jun 2019 09:36 AM
கரும்பு பயிரிடும் விவசாயிகள், அதை ஆலைக்கு தருவதாக பதிவு செய்யும்போது வழங்க வேண்டிய ஒப்பந்த நகலை கடந்த 3 ஆண்டுகளாக வழங்காமல் சர்க்கரை ஆலை ஏமாற்றி வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் அரைவைக்காக கரும்பு வழங்கி வந்தனர். இதற்காக, அவர்களுக்கு கரும்பு நடவு செய்யும்போது பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் ஒப்பந்த நகல் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் பதிவு செய்யும் கரும்பை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்த நகலை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. தற்போது, கரும்பை எங்களிடம்தான் வழங்கினீர்கள் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பியுங்கள் என ஆலை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், ஒப்பந்த நகலைத் தர முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தர விமல்நாதன் கூறியதாவது: திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அரைவைக்காக கரும்பு வழங்கியுள்ளனர். சுமார் ரூ.80 கோடி நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டியுள்ளது.
கரும்பை பதிவு செய்யும்போது ஆலை நிர்வாகமும், விவசாயியும் ஒப்பந்தம் செய்துகொள்வது நடைமுறை. அந்த ஒப்பந்த நகல் விவசாயிக்கு ஆண்டுதோறும் தமிழில் வழங்கப்படும். அதேபோல, கரும்பை அரைவை செய்தவுடன் விவசாயிக்கு எவ்வளவு தொகையைக் கொடுக்க வேண்டும் என்ற கிரையப் பட்டியலை ஆலை நிர்வாகம் தமிழில் வழங்கி வந்தது.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஒப்பந்த நகலை விவசாயிகளுக்கு வழங்காமல் ஆலை நிர்வாகம் ஏமாற்றிவிட்டது.
இந்நிலையில், ஆலை நிர்வாகத்தின் தரப்பில் தற்போது ஆடிட்டர் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2 வங்கிகளில் மட்டும் கரும்பு விவசாயிகளின் பெயரில் ஆலை நிர்வாகத்தால் பெறப்பட்ட கடன் தொகை ரூ.360 கோடி எனத் தெரியவந்துள்ளது.
அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளின் பெயரில் அந்தந்த பகுதி வங்கிகளில் ஆலை நிர்வாகம் எவ்வளவு தொகையைக் கடனாகப் பெற்றுள்ளது என்ற விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அங்குள்ள வங்கியினரிடம் கேட்டுப் பெறவேண்டும்.
சர்க்கரை ஆலைக்கு எந்தெந்த விவசாயி எத்தனை ஏக்கர் கரும்பை பதிவு செய்துள்ளார், அதில் எத்தனை ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது, அரைவை செய்யப்பட்ட கரும்புக்கான தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதா என்பதையெல்லாம் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரும், கரும்பு அலுவலராக இருப்பவரும் கண்காணிக்க வேண்டும் என கரும்பு கட்டுப்பாட்டு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளைக் கூறியுள்ளது. ஆனால், இந்த நடைமுறைகள் அனைத்தையும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பின்பற்றவில்லை. இதனால் பல்வேறு முறைகேடுகளில் ஆலை நிர்வாகம் ஈடுபட, எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்துள்ளது என்றார்.
விசாரணை நடைபெறுகிறது
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கூறியபோது, "திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.74 கோடி என ஆலையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT