Last Updated : 07 Jun, 2019 01:05 PM

 

Published : 07 Jun 2019 01:05 PM
Last Updated : 07 Jun 2019 01:05 PM

புதுச்சேரியில் அனைத்து அரசுத் துறைகளிலும் ஒரு மாதத்துக்குள் பயோமெட்ரிக் வருகைப்பதிவு

புதுச்சேரியில்  அனைத்து அரசு துறைகளிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டை ஒருமாதத்துக்குள்  செயல்படுத்த உள்ளதாக  முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று (வெள்ளிக்கிழமை) திடீர் ஆய்வு மேற்கொண்டார். தலைமை செயலக பணியாளர் சீர்திருத்த துறை, நிதி துறை, கூட்டுறவு துறை, நிர்வாக மேலாண்மை துறை, உள்துறை, தலைமை லஞ்ச ஒழிப்பு அலுவலகம், பட்ஜெட் அலுவலகம் ஆகியவற்றில் முதல்வர் ஆய்வு செய்தார்.

முதல்வருடன் தலைமை செயலர் அஸ்வினி குமாரும் உடன் சென்றார். ஆய்வின் போது தலைமை செயலக ஊழியர்கள் 25 சதவிகிதத்தினர் விடுப்பு எடுத்திருந்ததால் அதிகாரிகளிடம் விடுப்பிற்கான அனுமதி கடிதத்தினை கேட்டறிந்தார். அப்போது பல அதிகாரிகளும் ஊழியர்களும் 10 மணி வரை பணிக்கு வரவில்லை என்பதை வருகை பதிவேடு மூலம் முதல்வர் உறுதி செய்து தலைமை செயலரிடம்  நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன் விவரத்தையும் அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

"அரசு ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும் எனவும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் ஒரு மாதத்துக்குள் பொருத்த வேண்டும் என தலைமை செயலரிடம் வலியுறுத்தியுள்ளேன். மக்களுக்காக தான் பணி செய்ய அரசு ஊழியர்களும்  உள்ளனர். ஆகவே ஊழியர்களின் வருகை குறித்து தொடர்ந்து நானும் அமைச்சர்களும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வோம்.

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் 24 மணி நேரமும் கடைகள் திறப்பது குறித்து வர்த்தக சங்கம், அரசு துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்.

மக்கள் பிரச்சினைக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். ஆளுநருக்கு எதிராக போராட்டம் குறித்த எனது பேச்சு வன்முறையை தூண்டவில்லை. கடந்த முறை அமைதியாக தர்ணாவைதான் நடத்தினேன். போராட்டம் நடத்த எனக்கு அதிகாரம் இல்லையா? துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்படும் மக்கள் நல திட்டங்கள் சார்ந்த  கோப்புகள் எந்த வித காரணமும் இல்லாமல்  திரும்பி வருகிறது.

துணை நிலை ஆளுநர் மாநில அரசு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தனிப்பட்ட முறையில் அவர் மீது எந்த விரோதமும், குரோதமும் எனக்கு கிடையாது. .மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால் ஆளுநரை மக்கள் கேட்க மாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளை தான் கேட்பார்கள்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x