Published : 16 Jun 2019 12:00 AM
Last Updated : 16 Jun 2019 12:00 AM
நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையாற்றி வரும் நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அளவிலான அங்கீகாரத்தை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், வேளாண்மை, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து, ராணுவநடவடிக்கைகள், சுற்றுலா, விளையாட்டு மற்றும் நீர்நிலைகளைத் தூர் வாருதல் உள்ளிட்ட அரசின்பல்வேறு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்டவை வானிலையை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன. அந்த அளவுக்கு மனித வாழ்வியலோடு வானிலை ஒன்றிப்போய்விட்டது.
வானிலை என்பது அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. 17-ம் நூற்றாண்டில் எவாஞ்ஜெலிஸ்டா டொரிசெல்லி என்ற இத்தாலிய இயற்பியல் அறிஞர் காற்று அழுத்தத்துக்கும், வானிலைமாற்றத்துக்கும் தொடர்பு இருப்பதை முதலில் கண்டறிந்தார். 1643-ம் ஆண்டு பாரோமீட்டர் என்ற காற்றழுத்தத்தை அளவிடும் கருவியைக் கண்டறிந்தார். இக்கருவி இன்றும் வானிலையைக் கணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் பின்னர் 1714-ம் ஆண்டு டேனியல் ஃபாரன்ஹீட் என்ற ஜெர்மன் இயற்பியல் அறிஞர்சூரிய ஒளி வெப்பத்தை அளவிடும்தெர்மாமீட்டரை உருவாக்கினார். பிற்காலத்தில் சூரிய வெப்பம்,அவரது பெயரிலேயே ‘ஃபாரன்ஹீட்’ என அளவிடப்படுகிறது.
ரேடார் கருவி
வானிலைத் தரவுகளை உடனுக்குடன் பகிர முடியாத அன்றைய காலகட்டத்தில், 19-ம் நூற்றாண்டின் மத்தியில் தந்தி மூலமாக தகவல்அனுப்பும் முறையை அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் மோர்ஸ் கண்டுபிடித்தார். பிற நாடுகளுடன் தகவல் பகிர்வு அப்போதுதான் தொடங்கியது. 1920-ம்ஆண்டில் குளிர் காற்றும், வெப்பக்காற்றும் வானிலை மாற்றத்துக்கு அடிப்படையாக இருப்பதை நார்வேநாட்டு வானிலை ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்தது.
இந்த வானிலை தரவுகள் முதல் மற்றும் 2-ம் உலகப் போரில் ஈடுபட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் படையெடுப்பு திட்டமிடலுக்குப் பேருதவியாக இருந்தன. அந்நாடுகள் வானிலைஆராய்ச்சிக்கென அதிக நிதியைஒதுக்கின. அதில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ரேடார் கருவி. அக்கருவி முதலில் போர் விமானம் மற்றும் கப்பல்கள் இயங்கும் வேகம், இருக்கும் இடம் ஆகியவற்றைக் கண்டறிந்து, அவற்றைத்தாக்கி அழிக்கப் பயன்படுத்தப்பட்டது.
2-ம் உலகப்போர் முடிவுக்குப் பிறகு, அந்த ரேடார் கருவிகள், காற்றின் திசை, வேகம், மேகக் கூட்டங்களின் நகர்வு, மழையின் அடர்த்தி ஆகியவற்றைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது.
1950-ம் ஆண்டில் வானிலைத் தரவுகள் கணினிமயமாயின. 1960-ம்ஆண்டில் டைரோஸ்-1 என்ற வானிலை செயற்கைக்கோளை நாசா விண்ணில் ஏவியது. அப்போது முதல் செயற்கைக்கோள் வழியாக வானிலைத் தரவுகள் பெறப்பட்டன. 1990-ம் ஆண்டில் வானிலை தரவுகள் முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டன. அவை இணைய சேவை மூலமாக உலகம் முழுவதும் பகிரப்பட்டன.
இந்தியாவில் முதல்முறையாக 1792-ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. அன்று முதல், புயல், கனமழை, குளிர் மற்றும் வெப்ப அலை என பல்வேறு முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய கஜா உள்ளிட்ட பல்வேறு புயல்களின் நகர்வை சரியாகக் கணித்து, சேதம்மற்றும் உயிரிழப்பை குறைத்ததில் சென்னை வானிலை மையம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இம்மையம் சுமார் 140 ஆண்டுகளுக்கும் மேலாக, வானிலை விவரங்களை ஒரு நாள்கூட தவறாது பதிவு செய்து, ஆவணப்படுத்தி வருகிறது.
இதன் நூற்றாண்டு கடந்த வானிலை சேவையை உலக வானிலை ஆய்வு நிறுவனம் அங்கீகரித்து, சான்றளித்து, கவுரவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
இம் மையத்தில் இதுநாள் வரை பணியாற்றிய, பணியாற்றி வரும் அனைத்து நிலை பணியாளர்களின் கடும் உழைப்பால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இடைவிடாது வானிலைத் தரவுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதை அங்கீகரித்து, உலக வானிலை ஆய்வு நிறுவனம் சான்றளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்ற அங்கீகாரம், திருவனந்தபுரம், மும்பை, கோவா, புனே ஆகிய வானிலை ஆய்வு மையங்களுக்கும் கிடைத்துள்ளது. தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் 18-வது உலகவானிலை காங்கிரஸ் மாநாட்டில்இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT