Published : 26 Sep 2014 08:32 AM
Last Updated : 26 Sep 2014 08:32 AM
‘தி இந்து’ தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான திருச்சியைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஜெனிடா ஆண்டோ செர்பியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் சாம்பியன் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை தட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.
‘தி இந்து’வில் கடந்த ஆண்டு அக்டோபர் 9-ல் ‘நம்பிக்கை’ பகுதியில் ஜெனிடா குறித்து வெளியானது.
இந்தாண்டு ஜூலை 15-ம் தேதி வெளியான ‘தி இந்து’வில் ஸ்காட்லாந்தில் காமன்வெல்த் நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்ற தகவலை தெரிவித்திருந்தோம்.
அதே செய்தியில் ஆகஸ்ட் மாதம் நார்வே நாட்டில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துக் கொள்ளவும் செப்டம்பர் மாதம் செர்பியாவில் நடைபெறும் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் கலந்துகொள்ளவும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் தமிழக முதல்வர் உள்ளிட்ட நல்ல உள்ளங்களின் உதவிைய ஜெனிடா எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்தி ருந்தோம்.
இதை படித்த பலர் ஜெனிடாவிற்கு உதவ முன்வந்தனர். திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் குமார், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் நீலமேகம், ஜூனியர் சேம்பர் அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர் அருண் பிரசாத் உள்ளிட்ட பலர் பல்வேறு உதவிகளை செய்தனர்.
இதன் பலனாக நார்வேயில் நடைபெற்ற போட்டியில் ஜெனிடா கலந்துகொள்வதற்கான அனைத்து உதவிகளும் தங்குதடையின்றி கிடைத்தன.
ஆனாலும், நார்வேயில் ஜெனிடா விற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த போட்டியில் பதக்கம் பெறும் வாய்ப்பு கை நழுவிப்போனது.
இந்நிலையில், செர்பியாவில் செப்டம்பர் 5 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் சாம்பியன் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று வந்துள்ளார்.
இப்போதும் வழக்கம்போல அவருக்கு போட்டியில் பங்கேற்க செல்ல நிதி பற்றாக்குறை ஏற்பட, ஒரு பயண ஏற்பாட்டாளரிடம் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்று போட்டியில் பங்கேற்று வெற்றியுடன் ஊர் திரும்பியுள்ளார்.
நேற்று திருச்சி திரும்பிய ஜெனிடா, “ ‘தி இந்து’ செய்தியின் உதவியை என்னால் மறக்கமுடியாது. அந்த செய்தி மூலம் பலவிதங்களில் எனக்கு பலர் உதவி செய்தனர். நார்வே போட்டிக்கான அனைத்து உதவியும் கிடைக்க அந்த செய்தி உதவியது. சென்ற ஆண்டும் இதே போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். இப்போதும் தங்கம் வென்றுள்ளேன். அடுத்த ஆண்டும் தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும். அதோடு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற வேண்டும். திருச்சியில் செஸ் அகாடமி ஒன்றை உருவாக்கி ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக செஸ் பயிற்சி அளிக்க வேண்டும்” என தனது ஆசைகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.
திருச்சி எம்.பி குமார் ஜெனிடாவை சால்வை அணிவித்து வாழ்த்தி, “இனி உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள் செய்து தருகிறேன்” என உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
‘தி இந்து’ வாசகர்களின் ஆசியுடன் ஜெனிடா சாதனைகள் பல படைக்கட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT