Last Updated : 16 Jun, 2019 12:00 AM

 

Published : 16 Jun 2019 12:00 AM
Last Updated : 16 Jun 2019 12:00 AM

தமிழகம் முழுவதும் ஆதார் மையங்களில் 376 பணியாளர்களின் ‘யூசர் ஐடி’ முடக்கம்: புதிய ஆதார் அட்டை பெறுவதில் சிக்கல்

மத்திய அரசின் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் (உதாய்) மூலம் 2009-ம் ஆண்டு முதல் ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணி 2011-ல் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. முதலில் இப்பணியை மத்திய அரசின் பாரத மின்னணு நிறுவனம் மேற்கொண்டது. தொடர்ந்து தமிழக அரசின் எல்காட், அரசு கேபிள் டிவி நிறுவனம் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் 339 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல, எல்காட் நிறுவனம் 32 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், 124 நகராட்சி அலுவலகங்கள் உட்பட 206 நிரந்தர ஆதார் மையங்களை அமைத்துள்ளன. மொத்தம் மாநிலம் முழுவதும் 545 நிரந்தர மையங்கள் உள்ளன.

இம்மையங்கள் மூலம் ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், அட்டைகளைத் தொலைத்தோர், திருத்தம் செய்ய விரும்புவோர் விண்ணப்பித்து புதிய அட்டைகளைப் பெறலாம். இச்சேவைக்கு ரூ.50 செலுத்தினால் போதும். இம்மையங்களில் நியூ லைப் பிளேஸ்மென்ட் என்ற தனியார் நிறுவனம் 700-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்திருந்தது. அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,645 வழங்கி வந்தது.

அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்த நிலையில், ஜூன் 12-ல் 376 பணியாளர்களின் ஐடியை திடீரென உதாய் முடக்கியது. 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் ஆதார் தொடர்பான பணிகளை மேற்கொள்ள முடியாததால், புதிய ஆதார் அட்டை பெறுவது, திருத்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதார் பணியாளர்கள் கூறுகையில், ‘இம்மாதம் எங்களுக்கு ஊதியத்தை உயர்த்துவதாகக் கூறினர். இதனால் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்நிலையில் திடீரென எங்களது ஐடியை முடக்கியதால், ஆதார் பணி மேற்கொள்ள முடியாமல் வீட்டிலேயே இருக்கிறோம். இதுகுறித்து கேட்டால், தவறான ஆவணங்களை அனுப்பியதாகக் கூறுகின்றனர். அந்த ஆவணங்களை கொடுத்த விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படவில்லை.

ஆவணத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர் கையெழுத்து இருக்க வேண்டும் என்கின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ளாமல், ஏதாவது ஓர் ஆவணத்தை கொடுத்து அனுப்பச் சொல்கின்றனர். அனுப்பி வைத்தாலும் ஆதார் வருவதில்லை. இருந்தபோதிலும், இந்த காரணத்தைக் கூறி எங்களது ஐடியை முடக்கிவிட்டனர்' என்றனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘முடக்கப்பட்ட ஐடியை மீண்டும் செயல்படுத்த உதாய் நிறுவனத்திடம் எல்காட், அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் பேசி வருகின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x