Last Updated : 20 Jun, 2019 12:08 PM

 

Published : 20 Jun 2019 12:08 PM
Last Updated : 20 Jun 2019 12:08 PM

அனைத்துப்பிரிவு போலீஸாருக்கும் பாடி வோர்ன் கேமராக்கள்: வாகன ஓட்டிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை தடுக்க அமலாகுமா?

சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட பொது இடங்களில் வாகன தணிக்கையை போக்குவரத்து போலீஸார் மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கு, க்ரைம், இரவு ரோந்து போலீஸார் என அனைத்துப் பிரிவு போலீஸாரும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கும் போலீஸாருக்கும் இடையேயான சர்ச்சைகளில் யார் மீது தவறு என்பதை ஆதாரபூர்வமாக உறுதி செய்ய அனைத்துப் பிரிவு போலீஸாருக்கும்  'பாடி வோர்ன்' கேமராக்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மதுரையில் எழுந்துள்ளது.

ஒவ்வொரு நகரிலும் போக்குவரத்து விதிமீறல், சந்தேக நபர்களை கண்டறிய சோதனைச் சாவடி மற்றும் வாகனத்தணிக்கை என்ற பெயரில் பொது இடங்களில் போலீஸார் ஆய்வு செய்கின்றனர்.

இதுபோன்ற இடங்களில்  ஆய்வாளர், எஸ்.ஐ. தலைமையில்  குறிப்பிட்ட போலீஸார் மட்டும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தனிநபராக ஆய்வு செய்யக் கூடாது.  

ஆய்வில் ஈடுபடும் போலீஸ் குழுவுக்கும், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கும் இடையே  எதிர்பாராதவிதமாக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. போலீஸார் வாகன ஓட்டிகள், பொதுமக்களை கையாளும் முறையில் சில பிரச்சினைகள் உருவாகலாம்.

இருப்பினும், பெரும்பாலும் பொதுமக்களுக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் பதிவாகும் வாய்ப்பே அதிகம்.  போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டாலும், இறுதியில் பாதிக்கப்படுவது பொது மக்களாகவே இருக்கின்றனர்.

சிசிடிவி இல்லாத இடங்களில்  யார் மீது தவறு என்பதை ஆதாரபூர்வமாகக் கண்டறிவதில் சிக்கல் இருந்தது. இதைதவிர்க்கும் வகையில்,  சென்னை போன்ற பெருநகரங்களில் சமீபத்தில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து பிரிவில்  ‘பாடி வோர்ன்’ கேமராக்கள்  அறிமுகப்படுத்தப்பட்டது.

மதுரையில்  போக்குவரத்து பிரிவுக்கு 20 ‘பாடி வோர்ன்’ கேமராக்கள்  கடந்த 6 மாதத்திற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளன. ஆய்வாளர், எஸ்ஐ தலைமையில் ஒரு குழுவினர்  வாகனத் தணிக்கையில் ஈடுபடும்போது,  அதிகாரி அந்தஸ்தில் உள்ள  நபர் ‘பாடிஓன்’ கேமராவை தனது சட்டை காலரில்  குறிப்பிட்ட தூரம் வரை படமெக்கும் வகையில் அணியவேண்டும்.

சுமார் 60 ஜிபி தகவல் சேமிப்பு திறன்கொண்ட இதில் இரு தரப்பிலும் பேசிக்கொள்ளும்  நடவடிக்கை ஆடியோ, வீடியோ காட்சியாக பதிவாகும். பதிவை சம்பந்தப்பட்ட ஆய்வாளரோ, எஸ்ஐக்களோ பார்க்க முடியாது. தேவைப்படும் பட்சத்தில் எஸ்பி அல்லது காவல் ஆணையர்கள் மட்டுமே பதிவு தகவல்களை பார்க்கலாம்.

மதுரையில் கடந்த சனிக்கிழமை இரவில் செல்லூர் புதுப்பாலம் இறக்கத்தில் சிறப்பு ரோந்து போலீஸ் குழுவினர் வாகனத் தணிக்கையின்போது, போலீஸார் தாக்கியதில் விவேகானந்த குமார் என்ற இளைஞர் மரணம் அடைந்ததார் என புகார் உள்ளது.

போலீஸ் தரப்பில் இதை மறுத்தாலும், யார் மீது தவறு என்பதை அறிய அங்கு சிசிடிவி கேமரா பதிவுகளை வெளிப்படையாகக் காட்ட போலீஸ் தயங்குவதால் சந்தேகம் அதிகரித்துள்ளது.

இது போன்ற சூழலில் முறையாக வாகனத் தணிக்கையில் ஈடுபடும் குழுவுக்கான எஸ்ஐ ‘பாடி வோர்ன்’ கேமராவைப் பொருத்தி இருந்தால் என்ன நடந்தது என்பது  ஆவணப்பூர்வமாக தெரிந்து இருக்கும். யார் மீது தவறு என்பதை உடனே கண்டறியலாம்.

இந்த மாதிரியான குழப்பத்தை தவிர்க்க, மதுரையில் போக்குவரத்து மட்டுமின்றி சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு  ‘பாடி வோர்ன்’ கேமராக்கள் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது:

மதுரையில் சிக்னல், சோதனை சாவடி உட்பட பொது இடங்களில் வாகன ஓட்டிகள், பொது மக்களிடன் கனிவான முறையை கையாள வேண்டும் என ஏற்கனவே காவல் ஆணையர்  அறிவுறுத்தி உள்ளார் . தற்போது, ஹெல்மெட் சோதனை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பால் சோதனை சாவடிகள், முக்கிய சந்திப்பு பகுதிகளில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவினரும் அடிக்கடி வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.

குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவோர் சிலர் போலீஸாருக்கு வாக்குவாதம் செய்கின்றனர். போதிய ஆவணமின்றி வாகனம் ஓட்டுவோர் ஆய்வின் போது, ஏதாவது காரணம் சொல்லி தப்புகின்றர். 

ஒருசில இடங்களில் இளம்வயது போலீஸாரும்,பொதுமக்களிடம்  தங்களது வேகத்தைகாட்டும் போது, வாக்குவாதம் உருவாகிறது. புகார், வழக்கு என, செல்லும்போது, யார் மீது தவறு என்பது ஆதாரபூர்வமாக தெரிந்துகொள்ள சிசிடிவியைவிட ‘பாடிவோர்ன்’ கேமராக்கள் உதவுகிறது.  

குறிப்பாக வாகனத் தணிக்கை, முக்கிய விசாரணை அதிகாரிகள், சோதனை சாவடி போலீஸ் அதிகாரிகளுக்கும் ‘பாடி வோர்ன்’ கேமராக்கள் வழங்கலாம் என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x