Last Updated : 03 Jun, 2019 12:00 AM

 

Published : 03 Jun 2019 12:00 AM
Last Updated : 03 Jun 2019 12:00 AM

திருச்சியில் பராமரிப்பின்றி பூட்டியே கிடப்பதால் புதர்காடாக மாறிய மேயர் பங்களா

திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோருக்காக கட்டப்பட்ட பங்களாக்கள், பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக பூட்டிக் கிடப்பதால், தற்போது புதர்காடாய் காணப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகில் கடந்த 2008-ல் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.1 கோடி செலவில் மாநகர மேயர், துணை மேயர் ஆகியோருக்கான பங்களாக்கள் கட்டப்பட்டன.

அந்த பங்களாவில் காங்கிரஸை சேர்ந்த அப்போதைய மேயர் சாருபாலா ஆர்.தொண்டைமான் குடியேறவில்லை. இதனால், மேயர் பங்களா பூட்டியே கிடந்தது. திமுகவைச் சேர்ந்த அப்போதைய துணை மேயரான மு.அன்பழகன் மட்டும் குடியேறினார்.

இதனிடையே, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சாருபாலா மேயர் பதவியை ராஜினாமா செய்ததால், புதிய மேயராக தேர்வான காங்கிரஸை சேர்ந்த எஸ்.சுஜாதா, மேயரின் முகாம் அலுவலகமாக மேயர் பங்களாவை பயன்படுத்தி வந்தார். அவரும் சில மாதங்களில் அந்த பங்களாவை காலி செய்துவிட்டார்.

பின்னர், 2011-ல் மேயராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த ஆர்.ஜெயா, தனக்கான பங்களாவில் குடியேறாமல், துணை மேயருக்கான பங்களாவில் குடியேறி, துணை மேயருக்கு தனது பங்களாவை ஒதுக்கினார். அப்போதைய துணை மேயரான அதிமுகவைச் சேர்ந்த ஆசிக் மீரா அந்த பங்களாவில் குடியேறவில்லை.

இதனிடையே, துணை மேயர் பதவியை ஆசிக் மீரா ராஜினாமா செய்ததால், அதிமுகவைச் சேர்ந்த ஜெ.சீனிவாசன் புதிய துணை மேயரானார். அவரும் அந்த பங்களாவில் குடியேறவில்லை.

இந்த பங்களாக்களில் மு.அன்பழகன் மற்றும் ஆர்.ஜெயா ஆகியோர் வசித்தபோது, மட்டுமே மாநகராட்சி பராமரித்தது. அதன் பின்னர் பங்களாக்களை மாநகராட்சி பராமரிக்கவில்லை. இதனால், பங்களாக்களில் புதர்மண்டி காணப்பட்டன.

2016-ல் உள்ளாட்சி அமைப்பின் காலம் முடிவடைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், மேயர், துணைமேயர் பங்களாக்களும் கடந்த 3 ஆண்டுகளாக காலியாகவே கிடக்கின்றன. இதனால், இரு பங்களாக்களும் பராமரிப்பின்றி தற்போது புதர்காடாக மாறி, கட்டிடங்களும் சேதமடைந்து வருகின்றன. மாநகர மக்களின் வரிப்பணத்தில் கட்டிய இந்த பங்களாக்களை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைத்து, மாநகராட்சியின் பிற தேவைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மாநகர மக்களும், சமூக ஆர்வலர்களும்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியது:ரூ.1 கோடியில் கட்டப்பட்ட இரு பங்களாக்களிலும் பால்கனி உயரத்துக்கு மரங்கள் வளர்ந்துள்ளன. பங்களாவை சுற்றி புதர்கள் மண்டியுள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடக்கின்றன. உள் அலங்கார பொருட்கள், ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் தூசி படிந்து பயன்படுத்த லாயக்கற்றதாய் மாறிவிட்டன. மின் தடையை சமாளிப்பதற்காக நிறுவப்பட்ட பெரிய ஜெனரேட்டர்கள்பல ஆண்டுகளாக பயன்படுத்தாமலேயே இருப்பதால் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இந்த பங்களாக்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘மேயர், துணை மேயர் வசிக்கவே அந்த குடியிருப்புகள் கட்டப்பட்டன. மாமன்ற ஒப்புதல் இன்றி அவற்றை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. தற்போது அவை புதர்மண்டி காணப்படுவது உண்மைதான். அதை வேறு பயன்பாட்டுக்கு விடுவது குறித்து மாநகராட்சி ஆணையர்தான் முடிவெடுக்க முடியும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x