Published : 26 Jun 2019 10:45 AM
Last Updated : 26 Jun 2019 10:45 AM
உதகை நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளது. மேலும், பருவ மழையும் இது வரை முறையாக பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முக்கிய குடிநீர் ஆதாரம் பார்சன்ஸ்வேலி அணை.
இதுதவிர மார்லிமந்து, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகளில் இருந்தும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
பார்சன்ஸ்வேலி அணையில் உள்ள தண்ணீர் மின் உற்பத்திக் காகவும் பயன்படுத்தப்படுகிறது. உதகை நகராட்சிக்காக பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து இரண்டு குடிநீர் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுவரும் நிலையில், தற்போது மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கான பணிகளும் நடந்து வருகின்றன. இதனிடையே, கடந்த ஆண்டு டிசம்பருக்கு பிறகு உதகை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் பார்சன்ஸ்வேலி அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்தது.
ஆனால், ஏப்ரல், மே மாத காலத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்தது. இதன் காரணமாக பார்சன்ஸ்வேலி அணையில் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்தது. இதனால், கோடை காலத்தில் உதகை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பருவ மழை காலமான தென்மேற்கு பருவமழை இது வரை சரி வர பெய்யவில்லை. குடிநீர் தேவைக்காகவும், மின் தேவைக்காகவும் அணையில் இருந்து தொடர்ச்சியாக நீர் எடுக்கப்படுவதால் அணையில் நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது.
பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில், தற்போது 19 அடிக்கு மட்டும் நீர் இருப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிர மடையாத சூழலில், மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உதகையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. தென் மேற்கு பருவ மழை முறையாக பெய்யவில்லை. வாயு புயல் காரணமாக பருவ மழை தாமதமானது. வரும் நாட்களில் பருவ மழை தீவிரமடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், மழை பெய்யும் என நம்புகிறோம். மழை பொய்த்தால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். மின்வாரியத்திடம் மின் உற்பத்திக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் என கடிதம் எழுதுவோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT