Last Updated : 20 Jun, 2019 05:56 PM

 

Published : 20 Jun 2019 05:56 PM
Last Updated : 20 Jun 2019 05:56 PM

மதுரையில் வாகன தணிக்கையின்போது இளைஞர் பலியான சம்பவம்: போலீஸாருக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கின?

மதுரையில் வாகன தணிக்கையின்போது டயர் கடை உரிமையாளர் பலியான சம்பவத்தில் போலீஸாருக்கு எதிரான சிசிடிவி பதிவுகள்  சிக்கி இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை செல்லூர் புதிய பாலம் அருகே ஜூன் 15ம் தேதி இரவில் வாகனச் சோதனை என்ற பெயரில் டெல்டா சிறப்பு ரோந்து போலீஸார் தாக்கியதில் எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த விவேகானந்த குமார் மரணம் அடைந்ததாக புகார் எழுந்துள்ளது.

கணவர் இறந்த வேதனையில் அவரது மனைவி கஜபிரியா 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்த விவேகானந்த குமாரின் உடலை வாங்க அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து 5-வது நாளாக மறுத்து வருகின்றனர்.

வாகனச் சோதனை என்ற பெயரில் விவேகானந்த குமாரின் பைக்கின் சக்கரத்துக்குள் லத்தியை நுழைத்து, கீழே தள்ளி தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், விவேகானந்த குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும்.

கஜபிரியாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சம்பவம் குறித்த சிசிடிவி பதிவுகளை வெளியிடவேண்டும் போன்ற கோரிக்கைகளை அவரது உறவினர்கள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமாரிடம் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். 5-வது நாளை எட்டிய நிலையில் அவரது  உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.  வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் விவேகானந்த குமார் குடும்பத்தினர் அடுத்த நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கின்றனர்.

விவேகானந்தகுமாரின் உறவினர்கள் தரப்பில் கூறியது:  தொடர்ந்து 5 நாளுக்கு மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் போராடியும் எங்களுக்கு சரியான முடிவு எட்டவில்லை. தானாக விழுந்து, விவேகானந்த குமார் இறந்ததாக போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட டெல்டா போலீஸ் படை மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை.

மாவட்ட நிர்வாகம் பரிந்துரையை போலீஸ் மதிக்கவில்லை. நேற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பேசினோம். அமைச்சர் செல்லூர் கே. ராஜூ மூலமும் பேசப்பட்டது.

கஜபிரியாவுக்கு அரசு வேலை, இழப்பீடு ஆகிய இரு பிரதான கோரிக்கைக்கு முடிவு தெரிந்தால் மட்டுமே உடலை வாங்குவோம். போலீஸ் சிசிடிவி கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல் உள்ளது.

இருப்பினும், எங்களது தரப்பில் தனியார் வர்த்தக  நிறுவனங்களில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா மூலம் சம்பவ இடத்தில் நடந்த பதிவுகளை சேகரித்துள்ளோம். போலீஸாரே விவேகானந்தனை தாக்கி இருப்பது தெரிகிறது. இதை தெரிந்து கொண்ட போலீஸார் விவேகானந்தகுமாரின் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்து இருக்கின்றனர். போலீஸுக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். உரிய நிவாரணம் கிடைக்காவிடில் அடுத்த நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்றனர்.

போலீஸ் தரப்பில் கேட்டபோது,  "இச்சம்பவம் பற்றி உதவி ஆணையர் ஒருவர் தலைமையில் விசாரிக்கிறோம். சிசிடிவி கேமரா பதிவுகளும் சேகரித்து வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x