Published : 10 Jun 2019 10:30 AM
Last Updated : 10 Jun 2019 10:30 AM
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்பது இதுவரை கனவாகத்தான் இருந்துவருகிறது. மேட்டூர் அணைக்கு கர்நாடக அரசு அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைக் கணக்கில் கொண்டு தினசரியோ அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறையோ தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், மாற்றுப் பயிர் திட்டமே இப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு ஜூன் மாதத்துக்குள் 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் உத்தரவிட்டுள்ளன. ஆனால், “அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போது தண்ணீர் திறந்துவிட முடியாது” என்று கர்நாடக அரசு கைவிரித்துவிட்டது. அதனால் வரும் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை நீண்டகாலமாக நீடிப்பதற்கு கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கே காரணம். ஜூன் 1-ம்தேதி முதல் ஜனவரி 31-ம் தேதிவரையிலான காலம் ‘பாசன ஆண்டு’ என்று அழைக்கப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இந்த காலகட்டத்தில் மட்டும்தான் திறக்கப்படும். ஆனால், கர்நாடக அரசு இந்த நடைமுறையைப் பின்பற்றாததே பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து காவிரி பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் மகாதானபுரம் வி.ராஜாராம் கூறியதாவது:
பாசன ஆண்டான ஜூன் 1-ம் தேதி முதல் ஜன. 31-ம் தேதி வரையிலான காலத்தை கர்நாடக அரசு பின்பற்றுவதில்லை. கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் ஜனவரி 31-ம் தேதி சமயத்தில் 50 முதல் 60 டிஎம்சி வரை தண்ணீர் இருக்கும். இத்தண்ணீரை பிப்ரவரி முதல் மே மாதம் வரை தங்களது பாசனத்துக்காக கர்நாடக அரசு பயன்படுத்துகிறது. அதனால் ஜூன் 1-ம் தேதி, 15 டிஎம்சி தண்ணீர் மட்டும்தான் அணைகளில் இருக்கும். அந்தத் தண்ணீரும் தங்களது குடிநீர் தேவைக்காக வேண்டும் என்று கூறுவார்கள். அதனால், மேட்டூருக்கு மாதந்தோரும் திறக்க வேண்டிய தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை.
இதுகுறித்து இரண்டு மாநில விவசாயிகளும் சுமார் 6 தடவை அமர்ந்து பேசியுள்ளோம். அப்போது கர்நாடக விவசாயிகள் மாற்று யோசனை கூறினர். ஜூன் மாதத்துக்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுங்கள். குறுவை சாகுபடியை விட்டுவிட்டு, ஆகஸ்ட் மாதத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்யுங்கள். அப்போது தண்ணீர் திறந்துவிடுவதில் பிரச்சினை இருக்காது என்று கர்நாடக விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்
அதன்படி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சோளம், கம்பு, உளுந்து, பருத்தி, காய்கறிபோன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்யலாம். ஆகஸ்ட் மாதத்தில் சம்பா நெல் சாகுபடி செய்தால் டிசம்பர் அல்லது ஜனவரியில் அறுவடை செய்ய முடியும். அவ்வாறு செய்தால் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அறுவடை செய்ய நேரிடும். அப்போது நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயமும் இருக்கிறது என்ற வாதத்தையும் மறுப்பதற்கில்லை. எனவே, இதுதொடர்பாக விவசாய சங்கங்களை அழைத்துப் பேசி, நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மாற்றுப் பயிர் திட்டம் குறித்து அரசு முக்கிய முடிவெடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கண்டிப் பான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
காவிரி பிரச்சினையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் உத்தரவுகளை மதிக்காமல் கர்நாடக அரசு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறது. எனவே, “பாசன ஆண்டு காலத்தில் மட்டும் தண்ணீர் திறப்பதுடன், அதன்பிறகு பாசனத்துக்காக கர்நாடகத்தில் உள்ள 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கவே கூடாது” என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் உரிய நேரத்தில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிட முடியும். தமிழக அரசும் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க இயலும். இது, அவ்வளவு எளிதாக சாத்தியமில்லை.
இவ்வாறு ராஜாராம் கூறினார்.
“கர்நாடக அணைகளில் உள்ள நீர்இருப்பு மற்றும் தண்ணீர் வரத்தைக் கணக்கில் கொண்டு உரிய விகிதாச்சாரப்படி மேட்டூர் அணைக்கு தினசரி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும்” என்று தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி ஆகியோர் வலியுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT