Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM
சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூர் அருகே இரணியூர் குடிநீர் ஊருணியை அதிகாரிகள் தூர்வாராததால், கிராம மக்களே களத்தில் இறங்கி தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் அருகே அம்மாப்பட்டி ஊராட்சி இரணியூர் பத்ரகாளியம்மன் கோயில் முன் அம்மன் சேங்கை என்ற குடிநீர் ஊருணி உள்ளது. பழமையான இந்த ஊருணி இரணியூர், செண்பகம்பேட்டை, முத்துவடு கநாதபுரம், நாகலிங்கபட்டி, மார்க்கண்டேயன்பட்டி, காந்தி நகர், அயினிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய் கிறது. தொடர் வறட்சியால் இந்த ஊருணி வறண்டது. இதனால் அப்பகுதியினர் தண்ணீருக்கு சிரமப்படுகின்றனர்.
மழைக்காலத்துக்குள் இந்த ஊருணியைத் தூர்வாரித் தர வேண்டுமென கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினர். அவர்கள் கண்டுகொள்ளாததால், அந்த ஊருணியைப் பயன்படுத்தும் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி தூர்வாரும் பணியைச் செய்தனர். ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களுக்கான செலவை கிராம மக்களே பகிர்ந்து கொடுத்தனர்.
இது குறித்து இரணியூர் பன்னீர்செல்வம் கூறுகையில், பல ஆண்டுகளாக தூர்வாராதது, வரத்துக் கால்வாய்கள் அடைப்பட் டது போன்ற காரணங்களால் ஊருணி வறண்டது. தண்ணீரின் தேவையை உணர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து தூர்வாரி உள்ளோம். வரத்துக் கால்வாயை மீட்டுத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள மானாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சூரங்காட்டுவலசை கிராமத்தில் கடுக்காய் ஊருணி அமைந்துள்ளது. வறண்டு கிடந்த இந்த ஊருணியை தூர்வாரி தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை இக்கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கிராம மக்களும், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையிலான அக் கட்சியினரும் சேர்ந்து சொந்த செலவில் கடுக்காய் ஊருணியை தூர்வாரி சுத்தம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT