Published : 01 Jun 2019 11:57 AM
Last Updated : 01 Jun 2019 11:57 AM
புதுச்சேரியில் சபாநாயகர் தேர்தலை நடத்துவதற்காக வரும் மூன்றாம் தேதி சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பான கோப்பினை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி அவரது அனுமதிக்கு காத்திருந்தது புதுச்சேரி அரசு. தற்போது 3-ம் தேதி பேரவை கூடுவதாக சட்டப்பேரவை செயலர் முறைப்படி அறிவித்துள்ளார். அன்றைய தினம் சபாநாயகர் தேர்தல் ஆளுநர் ஒப்புதலுடன் நடக்கிறது.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையிலான மோதல் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.இச்சூழலில் சபாநாயகர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸில் போட்டியிட்ட வைத்திலிங்கம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவர் வரும் ஜூன் 6-ம் தேதி டெல்லியில் பதவியேற்க உள்ளார். மக்களவை உறுப்பினராக வென்றதற்கான சான்றிதழ் பெற்ற 24-ம் தேதியில் இருந்து 14 நாட்களில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டூம். இதனால் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய தேர்தலை நடத்த அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதற்கு ஏதுவாக 3-ம் தேதி சட்டப்பேரவையை கூட்ட துணைநிலை ஆளுநரின் அனுமதிக்கு கோப்பினை புதுச்சேரி அரசு அனுப்பியது.
டெல்லியில் முகாம்:
அதே நேரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளார். தான் பதவியேற்ற 3 ஆண்டுகாலம் நிறைவடைந்துள்ள சூழலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டு டெல்லி சென்றார். தனது தாயின் நினைவு நாளில் பங்கேற்றுவிட்டு, பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளார். முக்கிய தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு அவர் புதுச்சேரி திரும்பிய பிறகுதான் அவரது முடிவின் படி இப்பதவியில் தொடர்வாரா என்பது பற்றி தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் சபாநாயகர்?
மக்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள வைத்திலிங்கம் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யு முன்பாக சபாநாயகர் தேர்தலை நடத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டு ஆளுநருக்கு கோப்பு அனுப்பியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸில் 15 எம்எல்ஏக்களும், திமுகவில் 3 பேரும், சுயேட்சை ஒருவரும் என 19 வாக்குகள் ஆளும் காங்கிரஸ் அரசின் தரப்பு வேட்பாளருக்கு கிடைக்கும். இதன் மூலம் அவர் சபாநாயகர் தேர்தலில் வெற்றி எளிதாக கிடைக்கும். அதேபோல் சபாநாயகர் பதவிக்கு எதிர்தரப்பில் யாரும் நிறுத்தப்படாவிட்டாலும் போட்டியின்றி வெல்லலாம். மக்களவைத் தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் என்ற பேச்சை எதிர்க்கட்சிகள் கைகழுவி விட்டன.
சபாநாயகர் பதவிக்கு தற்போதைய பொறுப்பு சபாநாயகர் சிவகொழுந்து, சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் பாலன், அரசு கொறடா அனந்தராமன்,முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் ஆகியோர் தரப்பினர் விரும்புகின்றனர். இதனை இறுதி செய்ய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் புதுச்சேரி வந்து இரு கட்டமாக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு புதுச்சேரி புறப்பட்டுள்ளார். இவர்களில் ஒருவரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
சட்டப்பேரவை கூடும் தேதி எப்போது, யார் புதிய சபாநாயகர் என்ற கேள்விகள்தான் தற்போது புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் அதிகளவு எழுப்பப்பட்டது. இச்சூழலில் ஆளுநர் அனுமதி அளித்ததன் பேரில் வரும் 3-ம் தேதி சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடுவதாக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். அன்றைய தினமே சபாநாயகர் தேர்தலும் நடக்கிறது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார். அன்று புதிய சபாநாயகர் யார் என்பது தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT