Published : 05 Jun 2019 11:49 AM
Last Updated : 05 Jun 2019 11:49 AM
அரசு கேபிள் டிவியில் கல்வி தொலைக்காட்சி சோதனை முறையில் ஒளிபரப்பு தொடங்கியது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை பிரத்யேகமாக ஒளிபரப்பி, மாணவர் சமுதாயத்துக்கு வழிகாட்டும் வகையில், ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது தொடங்கப்பட வேண்டிய இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பானது, படப்பிடிப்பு தளங்கள் அமைத்தல், நிதி ஒதுக்கீடு செய்தல், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான முன்னேற்பாடுகள் போன்ற காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டது.
இதற்கிடையில், ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதிநவீன கேமராக்கள், ஆளில்லா விமானங்கள் (Helicam) வாங்கப்பட்டு, தளங்கள் அமைத்து படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு கேபிளில் ‘கல்வி தொலைக்காட்சி’யின் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு கேபிளில் அலைவரிசை எண் 200-ல் பள்ளி கல்வித்துறையின் ‘கல்வி தொலைக்காட்சி’யின் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளது. பள்ளி கல்வித்துறையின் புதிய திட்டங்கள், சுற்றறிக்கைகள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரை யாடல்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான செயல்வழி கற்றல், பாடல்கள் மூலம் பாடங்களை புரிய வைத்தல் குறித்த பதிவுகள் ஒளிபரப்பப்படும்.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் போன்ற உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகள், ‘நீட்’ போன்ற போட்டித் தேர்வுகளை அணுகுதல், பிளஸ் 2, பிளஸ் 1, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்தல், சுமாராக மற்றும் மெதுவாக படிக்கும் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் வகையில் ஆலோசனைகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.
புதிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்பித்து, புரிய வைக்கும் வகையில் நிபுணர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும். இந்த தொலைக்காட்சி முழுநேர ஒளிபரப்பு விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்
இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் பேரூர் கல்வி மாவட்ட செயலர் மா.ராஜசேகரன் கூறும்போது, ‘பள்ளி கல்வித்துறையியின் பிரத்யேக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வரவேற்கத்தக்கது. மாணவர்களின் பாடத்திட்டம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி நடைமுறையில் உள்ளது.
அதை செயல்வழி கற்றல் மற்றும் படைப்பாற்றல் வழி கற்றல் முறையில் மாணவர்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்க வேண்டும். மாதிரி வகுப்புகள் நடத்த வேண்டும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT