Published : 01 Jun 2019 02:27 PM
Last Updated : 01 Jun 2019 02:27 PM
எதையும் கொண்டாடுவதற்கு மனநிலையே போதுமானதாக இருக்கிறது. அதனை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளது அண்மையில் இந்திய அளவிலும், உலக அளவிலும் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் #Pray_for_Naesamani என்ற ஹாஷ்டேக்.
எங்கோ ஒரு புள்ளியில் இளைஞர் ஒருவர் ஆரம்பித்த #Pray_for_Naesamani என்ற ஹாஷ்டேக் 19 வருடங்களுக்கு முன்னர் பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலும் நேசமணி கதாபாத்திரத்தை மீண்டும் அனைவர் மனதிலும் ஓடவிட்டு புன்னகைக்க செய்திருக்கிறது.
மேலும் இந்த கதாப்பாத்திரத்திரத்தை வைத்து மீம், கதைகள், விழுப்புணர்வு பிரச்சாரங்கள், தற்கால அரசியல் சூழல் என பதிவுகள் தொடர்ந்தது.
இந்திய செய்தி நிறுவனங்கள் தொடங்கி பிபிசி நிறுவனம் வரை இதை செய்தியாக்கிவிட்டனர். இன்னும் சில நிறுவனங்கள் கிடைத்தது இலவச விளம்பரம் என்று நேசமணி பாத்திரத்தை வைத்து வாடிக்கையாளர்களிடமும் கவனத்தை ஈர்த்தனர்.
#Pray_for_Naesamani ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆன போதே, எப்போதும்போல் ஆதரவு, எதிர்ப்பு பதிவுகள் பதிவிடப்பட்டன. இதில் பெரும்பாலனவர்கள் நேசமணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை வைத்தனர். அதிலும் குறிப்பாக பத்திரிகையாளர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் வாதிகளும் என நேசமணி குறித்த பதிவுகள் தொடர்ந்தனர்.
#Pray_for_Naesamani டிரெண்டிங்கை பயன்படுத்திக் கொண்ட நிறுவனங்கள்
ஒருகட்டத்தில் இந்த ஹாஷ்டேக் எல்லையை மீறி வெறுப்பை வரவழைக்கிறது என்றும் சிலர் பதிவிட்டனர். இன்னும் சிலர் சமூக ஆர்வலர் முகிலன் மாயமாகி 100 நாட்கள் கடந்துவிட்ட நிலை அதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் இனி தமிழகத்திலும் ஏதாவது முக்கியமான பிரச்சனைக்கு சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தால்கூட அந்த பிரச்சனையின் தீவிரத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இவர்கள் #Pray_for_Naesamani -யை டிரெண்ட் செய்தவர்கள் தானே என்று பிற மாநிலத்தவர்கள் புரிந்து கொள்ளக் கூடும் இது அறிவார்த்த சமூகத்திற்கு சறுக்கலை ஏற்படுத்தும் என்ற விமர்சனத்தை முன் வைத்தனர்.
சரி இவை எல்லாவற்றையும் சற்று ஒதுக்கிவிட்டு இந்த மீம், டிரெண்டிங் கலாச்சாரத்தை ஒரு வட்டத்துக்கு உள்ளே இரு கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலையிலிருந்து விலகி வெளியிலிருந்து பார்க்க வேண்டிய தேவையும் இக்காலத்தில் இருக்கிறது.
டிரெண்டிங், மீம் கலாச்சரம் குறித்து உளவியலாக விளக்குகிறார் மனநல நிபுணர் அசோகன் கூறும்போது, ”மீம் என்பது அடிப்படையில் ஒரு கலாச்சாரத்தின் உரையாடலை மாற்றுவது. அது ஒருவார்த்தையாக இருக்கலாம். ஒரு சொற்றொடராக இருக்கலாம்.
அடிப்படையில் மூன்று விதமான மீம்கள் பகிரப்படுகிறது. இதில் பெரும்பான்மையானவை உறவு சார்ந்து இருக்கும். உதாரணத்துக்கு நெடுஞ்சாலைகளில் மெதுவாக செல்லவும் மனைவி காத்துக் கொண்டு இருக்கிறார்... என்ற வாசகம் இருக்கும். இதனை மெதுவாக செல்லவும்... அதே மனைவிதான் காத்துக் கொண்டிருக்கிறார் என்று நகைச்சுவையாக கூறிவது மீம்.
அறிவார்ந்து சிந்திக்கக் கூடிய செய்திகளை சற்று நையாண்டி செய்து கிண்டலுடன் குறிப்பிடுவது மீம்.
மீம் என்பது ஒரு எளிமைப்படுத்தப்பட்ட விஷயம். இது எளிதாக அனைவரிடத்திலும் சென்றடையும். இதுதான் இதன் வெற்றிக்கு காரணம். அதாவது ஒரு அர்த்தமுள்ள உரையாடலை வித்தியாசமாக நையாண்டி தனத்தில் வேறுதளத்திலிருந்து கிண்டலடிப்பது. ஆனால் இதற்கு நேர்மறை, எதிர்மறை தன்மைகளும் உண்டு. தனிப்பட்ட நபரையும் தாக்கலாம்.
இவ்வாறுதான் காரணமே இல்லாமல் வைகோ ராசியில்லாதவர் என்ற மீமை திரும்பத் திரும்ப கொண்டு சென்றார்கள். அவரைப் பற்றிய இளைஞர்களின் கண்ணோட்டத்தை கணிசமாக மாற்றினார்கள்.
இதையும் நகைச்சுவையாகத்தான் எடுத்து கொண்டார்கள். இதில் சில நேரம் வரம்பும் மீறப்படுகிறது.
மீம்ஸ் என்பது பார்ப்பவர்கள் சிரிக்கும்படியாக இருக்க வேண்டும். பிறரை பார்த்து சிரிக்கும்படியாக இருக்கக் கூடாது.
தனிப்பட்ட தாக்குதலாகவோ சாதி, மதம் என இம்மாதிரி உணர்வுபூர்வமாக விஷயங்களில் மீம் கலச்சாரம் எதிர்மறையாக சென்றால் வருத்தத்தை அளிக்கும். இதில் முக்கியமானது உங்கள் விருப்பம் இல்லாமாலே சில மீம்களோ, டிரெண்டிங்கோ உங்களை அடையும்.
ஒரு இறுக்கமான சூழ்நிலையில் எடுத்துகாட்டுக்கு பெரிய நட்சத்திரங்கள் படங்கள் தோல்வி அடைந்தால் ஒரு சாதாரணமான படங்கள் கூட ஓடிவிடும்.
அதுபோல இந்த நேசமணி கதாபாத்திரம் எப்படி டிரெண்ட் ஆனது. அதில் விரசம் இல்லாத நகைச்சுவை இருக்கும். வடிவேலுவின் சிறந்த உடல் மொழி, அந்தக் காட்சியில் உள்ள அனைவருமே சிறப்பாக நடித்திருப்பார்கள். அதில் யாரையும் டோபா தலையா என்ற உருவ கேலி இருக்காது. இதனை அரசியலிலோ, சமூக விஷயங்களோட சிந்தாத்த எண்ணங்கள் கொண்டவர்கள் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்க.
இதனை துக்கமான வீட்டில் இரண்டு நாட்கள் சோகத்தில் இருப்பவர்களை ஒரு குழந்தையின் சேட்டை மகிழ்விக்கும் அதுமாதிரிதான். இறுக்கமான சூழ்நிலையை லேசாக்குவது போன்றுதான்.
இதேபோன்று தண்ணிரில்லா பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, தேர்தலில் எதிர்பார்த்த கட்சி வெற்றிபெறவில்லை என்ற சூழ்நிலையில் வரும் இம்மாதிரியான மீம்கள் சூப்பர் டூப்பராக டிரெண்டாகி விடுகின்றன.
இது ஒரு கலாச்சார மொழி. இது நமது அர்த்தமுள்ள உரையாடல்களை சில நேரம் மாற்றிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க முடியாது. இது தவறு, இது சரி என்று இல்லை.
உதாரணத்துக்கு மகாராஷ்டிராவில் ராக்கிங்கால் உயிரிழந்த மருத்துவ மாணவி பாயலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். ஆனால் அது அனைத்து தரப்பிற்கு சென்றடையவில்லை. அதற்கு காரணம் இது சாதி ரீதியான பிரச்சனை. நேசமணி டிரெண்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள் இதில் சார்ப்பு நிலை இல்லாதவர்கள் கூட பங்கெடுக்கலாம்.
இது பொதுவான விஷயம். யாரையும் காயப்படுத்தாது. பாயல் விவகாரத்தில் நான் தவறு என்று கருத்திட்டால் அதில் என்னை நான் அடையாளப்படுத்தி கொள்கிறேன். இதில் எதிர்தரப்பில் இருப்பவர்கள் எனது பதிவில் சண்டையிடுவார்கள். நேசமணியில் அது இல்லை. அது எல்லோராலும் விரும்பப்படக் கூடிய நகைச்சுவை . அதுதான் வித்தியாசம்.
நம்மில் பலருக்கு நம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பங்கேற்பது பிடிக்கும். அதன்வெளிபாடுத்தான் இந்த பாம் சைக்கலாஜி. தங்களுக்குள் தோன்று அனைத்துக் கருத்துகளையும் பதிவிட்டு #Pray_for_Naesamani -யில் சேர்த்துவிடுவார்கள். சமூக வலைதளங்களில் அழகான பொய் முகங்கள் கிடைக்கின்றன. அவை அழகாக உலா வருகின்றன.
அதுமட்டுமில்லாது இந்த டிரெண்டிக்கால் பாதிப்பு ஏற்படும் என்று இவ்வளவு முக்கியத்துவமும் கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை. இது அந்த நேரத்துக்கான டிரெண்டிங். குளத்தில் கல் எறிந்தால் ஏற்படும் அதிர்வலைகளைப் போன்றது. நாம் பார்க்கும் தொடுவானம்தான் உலகம் என்று எண்ணுவது தவறானது” என்று தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் டிரெண்டிங் மட்டுமல்ல தனி மனித தாக்குதல்கள் இல்லாத எதுவும் கொண்டாடப்படுவதில் தவறில்லை. எனினும் கொண்டாடத்திலும் அதில் நமக்குள்ள சமூக பொறுப்புணர்வையும் கவனத்தில் கொள்வோம்.
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT