Published : 11 Sep 2014 08:11 AM
Last Updated : 11 Sep 2014 08:11 AM
சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தும் மத்திய தேர்தல் ஆணையம், சுய அதிகாரம் பெற்ற அமைப்பாக உள்ளது. தேர்தலின்போது மாநில போலீஸாரும் அதிகாரிகளும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகின்றனர். நடத்தை விதிகளும் தீவிரமாக அமல்படுத்தப்படுகின்றன. அதனால்தான், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புகார்கள் எழுந்தாலும், ‘மனு தள்ளுபடி’, ‘மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்தனர்’ என்பது போன்ற புகார்கள் எழுவதில்லை.
ஆனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதுபோன்ற அதிகாரங்கள் இல்லை. பொதுவாக எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதற்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவே குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. தனக்கு விருப்பமானவரை ஆணையராக மாநில அரசு நியமிக்க முடியும். இதனால், மாநில தேர்தல் ஆணையம் சுய அதிகாரமிக்க அமைப்பாக செயல்பட இயலாது என்கின்றனர் நடுநிலையாளர்கள். இதுகுறித்து முன்னாள் தேர்தல் துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘மத்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ள நடத்தை விதிகளுக்கும் மாநில தேர்தல் ஆணைய நடத்தை விதிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால், அதிகாரத்தைப் பயன்படுத் துவதில்தான் பெரும் வித்தியாசம் உள்ளது. மாநில தேர்தல் ஆணையம் முழுஅதிகாரமிக்க அமைப்பாக செயல்பட முடிவதில்லை’’ என்றார்.
அரசியல் விமர்சகர் ஞானி கூறும்போது, ‘‘சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் பணி களை கவனிக்கும் அதிகாரிகள் தான் (மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் போலீஸார்) உள்ளாட்சித் தேர்தல் பணிகளையும் கவனிக்கின்றனர். ஆனால், இப்போதுமட்டும் ஏன் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது என தெரியவில்லை. மாநில தேர்தல் ஆணையர் தனது அதிகாரத்தை சிறப்பாக பயன் படுத்தினாலே பல பிரச்சினைகளை தவிர்த்து, தேர்தலை நடுநிலையாக நடத்த முடியும்’’ என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT