Published : 20 Jun 2019 04:54 PM
Last Updated : 20 Jun 2019 04:54 PM
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வாட்டி வதைத்து வந்த வெப்பம் நாளை முதல் குறைந்து, அடுத்த 6 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பச்சலன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 197 நாட்களாக சென்னையில் மழை பெய்யாமல் வறண்டு கிடந்து நிலையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்வித்து, மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் கடந்து சென்ற பின் வெயிலின் தாக்கம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையாக இருந்தது. இதோடு கத்திரி வெயிலும் சேர்ந்து கொண்டதால், பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. இதனால், மக்கள் பல்வேறு சிரமத்துக்கும் ஆளாகினார்கள்.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையும் போதுமான அளவு பெய்யாமல் இருந்ததாலும், கடும் வெயிலாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பல ஏரிகள் வறண்டன. பல்வேறு இடங்களிலும் நிலத்தடி நீர் குறையத் தொடங்கியது. பல இடங்களில் நீர் இன்றி வறண்டது. ஏறக்குறைய 197 நாட்களாக சென்னை மழையின்றி காய்ந்தது.
மேற்குத் தொடர்ச்சி மழை கடந்த 8-ம் தேதி கேரளாவில் தொடங்கிய பின் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் தேனி, நீலகரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் ஆங்ககாங்கே மழை பெய்தது. வெப்பச் சலனத்தாலும் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வந்தது.
ஆனால், அரபிக்கடலில் உருவான புயலுக்குப் பின் அந்த மழையும் குறைந்தது. இந்நிலையில், சென்னையில் 197 நாட்களுக்குப் பின் சென்னையில் வேளச்சேரி, பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல். போரூர், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், தரமணி, கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர் , ஆலந்தூர், நசரத்பேட்டை, உள்ளிட்ட பல இடங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
''சென்னையில் கடந்த 197 நாட்களாக மழை இல்லாமல் காய்ந்திருந்த நிலையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்று இரவு அல்லது நாளையில் இருந்து வரும் 26-ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். இந்த மழை அதிகபட்சமாக 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை பெய்யும். அதன்பின் தூறல் இருக்கும்
ஒரேநேரத்தில் இந்த 3 மாவட்டங்களிலும் மழை பெய்யாது. இன்று ஒரு சில இடங்களிலும் மறுநாள் மாவட்டத்தின் வேறு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். மேலும் வேலூர், புதுச்சேரியிலும் இந்த வெப்பச்சலன மழை இருக்கும்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாவதால், அரபிக் கடலில் இருந்து குளிர்ந்த மேற்கு திசை காற்றை ஈர்க்கும். இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடுத்துவரும் நாட்களில் நல்ல மழை பெய்யக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான வயநாடு, குடகு ஆகிய பகுதிகளில் 22-ம் தேதிக்குப் பின் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது''.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT