Published : 22 Jun 2019 11:49 AM
Last Updated : 22 Jun 2019 11:49 AM

தமிழகத்தில் திருமணத்துக்கு மீறிய உறவால் பத்து ஆண்டுகளில் 1,459 கொலைகள்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

தமிழகத்தில் திருமணத்தை மீறிய உறவால், கடந்த பத்து ஆண்டுகளில் 1,459 கொலைகள் நடைபெற்றுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில்  தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

திருமணத்துக்கு மீறிய உறவால் ஏற்படும் தகராறில் ரஞ்சித் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜித்குமார் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 10 ஆண்டுகளில் திருமணத்துக்கு மீறிய உறவு காரணமாக தமிழகத்தில் நடந்த கொலைகள் தொடர்பாகவும் இந்த பிரச்சினை தொடர்பாகவும் மாவட்ட அளவில் குடும்ப ஆலோசனை குழுக்களை உருவாக்குவது உள்ளிட்ட 20 கேள்விகளை மத்திய, மாநில அரசுகளுக்கு எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது,  தமிழக காவல் துறையின் சார்பில் 20 கேள்விகளில் 2 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

அதில், திருமணத்துக்கு மீறிய உறவு காரணமாக சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் 158 கொலைகளும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,301 கொலைகளும் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதே போல திருமணத்துக்கு மீறிய உறவு காரணமாக கடத்தல், மிரட்டல், தாக்குதல் உட்பட 213 குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளதாகவும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 621 குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சமீப காலமாக திருமணத்துக்கு மீறிய உறவு காரணமாக பெற்ற தாயே குழந்தையை கொலை செய்யும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், இது திருமணம், குடும்பம் என்ற கட்டமைப்பை பாதிக்கும் சமூக பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக எச்சரித்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டறிந்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் காவல்துறையினர் இதனை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், செல்போனில் ஆபாச படங்களை எளிதாக பார்க்க முடிவதால் தான் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என காவல்துறைக்கு  நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x