Published : 26 Jun 2019 11:05 AM
Last Updated : 26 Jun 2019 11:05 AM
ஊர் முழுவதும் குப்பை அள்ளுகிறோம், சாக்கடைகளை சரி செய்கிறோம். ஆனால், நாங்கள் வாழும் பகுதியில் குப்பையும், சாக்கடைக் கழிவுகளும் மண்டிகிடக்கிறது. மருந்துக்குக்கூட சுத்தம் என்பது இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதாப நிலையில்தான் வாழ்கிறோம்” என்கின்றனர் கோவை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் கண்ணீருடன்.
கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் பொது இடங்களை சுத்தம் செய்தல், குப்பையை அகற்றுதல், சாக்கடைக் கால்வாய், கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்தல், மழைநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். இவர்களுக்காக உள்ளாட்சி அமைப்புகள் சார்பிலேயே குடியிருப்புகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரை 100 வார்டுகளில், சுமார் 19 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த முக்கியமான மாநகராட்சியான கோவையில் குடியிருப்புகள், தொழில், வணிக நிறுவனங்கள், கல்வி, மருத்துவ நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. மாநகராட்சியில் உபரி பட்ஜெட் போடும் அளவுக்கு அதிக வருவாயும் உண்டு. இங்கு துப்புரவுப் பணியில் 4,500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தரப் பணியாளர்கள். மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர்.
கோவையில் பீளமேடு, வரதராஜபுரம், உக்கடம், வெரைட்டை ஹால் சாலை, வடகோவை காமராஜர்புரம், கணபதி உள்ளிட்ட இடங்களில், துப்புரவுப் பணியாளர்களுக்கான சிஎம்சி காலனிகள் உள்ளன. இவற்றில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் வசித்து வருகின்றனர். ஊரையே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளர்கள் வசிக்கும் பணி, மோசமான நிலையில்தான் உள்ளது. இந்த நிலையில், துப்புரவுப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கோரியும், புதிய குடியிருப்புகளை கட்டித்தர வலியுறுத்தியும், மாநகராட்சி ஆணையரிடம் திமுக மாநகர் மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினருமான நா.கார்த்திக் மனு அளித்தார். “நீங்கள் துணை மேயராகப் பொறுப்பு வகித்துள்ளீர்கள். மாநகராட்சி ஆணையரிடம் நீங்கள் மனு அளிக்கும் அளவுக்கு, துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை இருக்கிறதா?” என்று கேட்டோம்.
“மாநகராட்சிப் பகுதி முழுவதும் தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் குடியிருப்புகளில், சுத்தம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவுக்கு பரிதாபமாக உள்ளது. ஏறத்தாழ 40, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் பெரிதும் சேதமடைந்து, ஓட்டையும், உடைசலுமாகக் காணப்படுகின்றன. சாக்கடை அடைத்துக்கொண்டு கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. ஏற்கெனவே டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் சூழலில், அசுத்தமான இந்த சூழல் நோய் பரப்பும் கிடங்காகவே மாறிவிடும் அபாயம் உள்ளது. கழிவுநீர் செல்லும் சாக்கடைக் கால்வாய்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. போதிய அளவுக்கு குடிநீர் மற்றும் உப்பு தண்ணீரும் விநியோகிக்கப்படுவதில்லை. மழைநீர் வெளியேற வடிகால்கள் இல்லை. பல இடங்களில் குப்பை தேங்கிக் கிடக்கிறது. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வீட்டில் போதுமான இடவசதியும் இல்லாமல், நெருக்கடியான சூழலில் வசிக்கின்றனர்.
கடந்த திமுக ஆட்சியின்போது சுமார் 1,000 ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தோம். 2006-2011-ல் திமுக ஆட்சியில் நான் துணை மேயராக இருந்தபோது, பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டத் திட்டமிட்டு, மாநகராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றினோம். ஆனால், பின்னர் வந்த அதிமுக அரசு, அந்த திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. வாழவே தகுதியில்லா பகுதியான சிஎம்சி காலனிகள் மாறிவருவது வேதனையளிக்கிறது.கோவை மாநகராட்சியில் பல நூறு கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், ஊரையேசுத்தம் செய்யும் துப்புரவுபணியாளர்களைத்தான் கண்டுகொள்வதில்லை. உள்ளாட்சி அமைச்சரும் மாநகராட்சிப் பகுதிகளைகண்டுகொள்வதில்லை. தூய்மைப் பணிகளை மேற்கொள்ளபோதுமான ஆட்களும் கிடையாது.
எனவே, போர்க்கால அடிப்படையில் சாலை, குடிநீர், சாக்கடை வசதிகளை மேம்படுத்தி, குப்பையை அகற்ற வேண்டும். பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு, அந்த இடத்திலேயே புதிய குடியிருப்பு களைக் கட்டித்தர வேண்டும். தவறினால் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்” என்றார் உறுதியுடன் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.பீளமேடு சிஎம்சி காலனியைச் சேர்ந்த ரஞ்சித் கூறும்போது, “ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளன. சாக்கடை நீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் விநியோகிக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால், அருகில் உள்ள பகுதிகளுக்கு, எங்களது குப்பை வண்டிகளில் தண்ணீர் குடங்களை கொண்டுசென்று, தண்ணீர் பிடித்து வருகிறோம். அதிகாலை 5 மணிக்குச் செல்லும் நாங்கள், மாலை 4 மணியளவில்தான் வீடு திரும்ப முடிகிறது. இதனால், எங்கள் பகுதியை சுத்தம் செய்ய முடிவதில்லை. ஊர் முழுவதும் தூய்மைப் பணியில் ஈடுபட்டாலும், நாங்கள் வாழ்வது குப்பை, சாக்கடைக்கு மத்தியில்தான்” என்றார்.
குப்பை வண்டியில் தண்ணீர் குடங்கள்!
அதே பகுதியைச் சேர்ந்த ராணி என்பவர் கூறும்போது, “கொசுத்தொல்லையால் மிகுந்த அவதிக்குள்ளாவதுடன், நோய்த் தாக்குதல்களுக்கும் உள்ளாகிறோம். வீட்டின் சுவர்களும், கூரையும் மிகவும் சேதமடைந்த நிலையில்தான் உள்ளன. சாலை முழுவதும் சேதமடைந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால், குப்பை வண்டியில் தண்ணீர் கொண்டுவரும்போது, பாதி தண்ணீர் வழியிலேயே சிந்திவிடுகிறது. இரவு நேரத்தில் பலர் சாலையில் விழுந்து காயமடைகின்றனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT