Published : 04 Jun 2019 02:22 PM
Last Updated : 04 Jun 2019 02:22 PM

மதுரை மாவட்ட ஆட்சியர் திடீர் இடமாற்றம்: சிபாரிசு இல்லாமல் 1,500 பேருக்கு அங்கன்வாடி பணி ஆணை வழங்கியது காரணமா?

அமைச்சர் சிபாரிசுகளை ஏற்காமல் மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருந்த 1,500 பேருக்கு இரவோடு இரவாக அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் பணி ஆணை வழங்கியதால் ஆட்சியர் எஸ்.நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் அனுமதியில்லாமல் நுழைந்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அலுவலராக சரியாக செயல்படாத காரணத்தால் ஆட்சியராக இருந்த எஸ்.நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்குப் பதிலாக சுகாதாரத்துறை இணை செயலாளராக இருந்த எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டார்.

இவர், ஓசூர், கன்னியாகுமரி, வேலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சப்-கலெக்டராகவும், ஆட்சியராகவும் திறமையாகவும், நேர்மையாகவும் செயல்பட்டதால் அவரது நடவடிக்கைக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஆனால், அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்காததால் இவர் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார். கடைசியாக தேர்தலுக்காக மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கையை எந்தக் குழப்பமும் இல்லாமல் நேர்மையாக நடத்தி முடித்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென்று ஆட்சியர் எஸ்.நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தேர்தலுக்காக அவர் ஒரு மாதம் மட்டுமே இடமாற்றப்பட்டிருந்தாலும் இந்த ஒரு மாதத்திற்கு அவர் மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

இது உள்ளூர் அமைச்சர்கள், ஆளும்கட்சியினர், அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. நேற்று ஒரே நாள் இரவில் 1,500 பேருக்கு எந்த சிபாரிசும் இல்லாமல் சத்துணவு, அங்கன்வாடி பணிக்கான ஆணையை வீட்டிற்கே சென்று வழங்கியதின் பின்னணியே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து ஆட்சியர் அலுவலக அலுவலர் ஒருவர் கூறியது:

''மதுரை மாவட்டத்தில் ஏராளமான சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடம் காலியாக இருந்தது. சுமார் 1,500 பணியிடங்களை நிரப்ப கடந்த 2017-ம் ஆண்டில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையே இந்தப் பணியிடங்களில் தாங்கள் சொல்பவர்களைத்தான் நிரப்ப வேண்டும் என அமைச்சர்கள், ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் முயற்சித்தனர்.

அதிகாரிகளுக்கு நெருக்கடி தந்தனர். ஒரு பணியிடத்திற்கு ரூ.4 லட்சம்வரை பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது. யாருடைய சிபாரிசின் அடிப்படையில் நியமிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மதுரை ஆட்சியராக இருந்த எஸ்.நடராஜனை மாற்றி, புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜனை தேர்தல் ஆணையம் நியமித்தது.

தேர்தல் முடிந்ததும் கடந்த மே 27-ம் தேதிக்குள் நாகராஜன் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது நடக்காத நிலையில், மனு நீதிநாள் முகாமில் பலரும் மனுக்களை அளித்தனர். இதில் பல மனுக்கள் அங்கன்வாடி பணியிடம் தொடர்பானதாக இருந்தது.

இது குறித்து ஆட்சியர் விசாரித்தபோதுதான் 2 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படாதது தெரிந்தது. உடனே வளர்ச்சிப் பிரிவு, சத்துணவுப் பிரிவு அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கெனவே நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கோப்பு தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஊனமுற்றோர், கணவனை இழந்தோர் என பல்வேறு நிலையில் கஷ்டப்படும் நிலையிலுள்ள தகுதியானவர்களைத் தேர்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து 1,500 பேரும் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேரும் உத்தரவு ஆட்சியரின் நேரடிப் பார்வையில் தயாரானது.

ஊராட்சி ஒன்றியம் வாரியாக தேர்வானோரின் வீடுகளுக்கே அதிகாரிகள் நேரடியாகச் சென்று உத்தரவுகளை அளிக்கவும், உடனே பணியில் சேர்ந்ததாக கையெழுத்து பெற்று நேற்று இரவுக்குள் தன்னிடம் ஒப்பபடைக்க வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் நேற்றிரவே அதிகாரிகள் உத்தரவுகளுடன் கிராமங்கள்தோறும் புறப்பட்டனர். நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டு, உத்தரவுகளைப் பெற்ற பலரும் நம்ப முடியாத மகிழ்ச்சியில் உள்ளனர்'' என்றார்.

மதுரையில் பணிபுரிந்தது ஒரு மாதமாக இருந்தாலும் இதற்கு முன் மதுரையில் நேர்மையாகவும், அதிரடி நடவடிக்கைகள் எடுத்து பணியாற்றி பெயரெடுத்த சகாயம், அன்சுல் மிஸ்ராவை போல் ஆட்சியர் நாகராஜன் குறுகிய காலத்திலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து ஆட்சியாளர்களையும், அமைச்சர்களையும் மிரள வைத்து மக்கள் மனதில் இடம்பெற்றார். 

ஆட்சியருக்கு எதிராகத் திரும்பிய ஆளுங்கட்சி அதிருப்தி

‘அங்கன்வாடி பணியாளர்கள் நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டு, உத்தரவுகள் பிறக்கப்பட்ட தகவல் ஆளுங்கட்சியர், தலைமைச் செயலக அதிகாரிகள் பலருக்கும் தெரிந்தது. உடனே உத்தரவினை நிறுத்த பல்வேறு வழிகளில் முயற்சித்தனர். ஆனால், யாருக்கும் பிடி கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்வாளர்களை நியமிப்பதில் ஆட்சியர் நாகராஜன் கண்டிப்புடன் இருந்தார்.

இதனால் வேறு வழியில்லாமல் உத்தரவுகள் வெளியாகின. ஆளுங்கட்சியினர் உட்பட சிபாரிசு பட்டியலுடன் காத்திருந்தோருக்கு எந்த பலனும் கிடைக்காத சூழலில், இவர்களின் அதிருப்தி ஆட்சியருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் ஆட்சியர் மாற்றப்படலாம் என்ற சூழல் நிலவியது. எதிர்பார்த்தது போலேவே இன்று ஆட்சியர் எஸ்.நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x